என் மலர்
கதம்பம்
போகியில் ஆண்டாள் திருமணக் கோல தரிசனம்
- ஆண்டாள் மார்கழி 30 நாளும் இவ்வாறு விரதம் இருந்து பூஜை செய்து ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்க பெருமானுடன் ஐக்கியமானாள்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் போகி கல்யாணம் விமரிசையாக நடைபெறும்.
கோதை என்றும் ஸ்ரீஆண்டாள் என்றும் போற்றி வணங்கப்படும் ஸ்ரீதேவியின் அம்சமாகிய பூமி பிராட்டியார், ''அரங்கன்தான் என் கணவர், அதில் மாற்றம் இல்லை'' என்று உறுதியாக இருந்தாள். அவள் மார்கழி முப்பது நாட்களும் பாவை விரதம் இருந்து கண்ணனையே தன் கணவனாக அடைந்தாள்.
ஆடிப்பூர நாளில் அவதரித்த ஆண்டாள், பங்குனி உத்திர நன்னாளில் ஸ்ரீரங்கத்தில், 'ரங்கநாதா' என்று கூறியபடி கருவறைக்குள் சென்று ஆண்டவனுடன் ஐக்கியம் ஆனாள்.
இந்த நிகழ்வை, நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திர தினத்தன்று அம்பாள், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட தலங்களில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடக்கும்.
பகவான் தனது ஒரு அவதாரத்தில் ஸ்ரீராமனாக வந்து பிறந்தான். மகாலட்சுமியும் சீதையாக ஜனக குலத்தில் பிறந்தாள். அவனும் மனுஷ்யன்; இவளும் மனுஷி. இருவருக்கும் கல்யாணம் நடந்தது. அதேபோல், கிருஷ்ணனாக பகவான் ஒரு தடவை அவதரித்தான். மகாலட்சுமியும் ருக்மணியாக வந்து பிறந்தாள். கிருஷ்ணன்- ருக்மணி கல்யாணம் நடந்தது.
ஆனால், ஆண்டாள் அவதரித்தபோது, பகவான் ராமனாகவோ கிருஷ்ணனாகவோ வந்து பிறந்தானா என்றால், இல்லை. கோவிலில் அர்ச்சா ரூபமாய் படுத்துக் கொண்டிருந்த எம்பெருமானைத் தட்டி எழுப்பி, அவரை ஆண்டாள் கல்யாணம் செய்து கொண்டாள். ஆகவே, மற்ற திருக்கல்யாணங்களைக் காட்டிலும் பூதேவியான ஆண்டாளின் கல்யாணம் ஏற்றமுடையது, தனித்துவம் கொண்டது.
மார்கழியில், திருப்பாவை பாடி கண்ணனை கரம்பிடிக்க எண்ணிய ஆண்டாள், தன்னுடைய திருமணம் எப்படி எல்லாம் நடக்கும் என்பதை கனவிலே கண்டதாக நாச்சியார் திருமொழியில் பாடி இருக்கிறாள்.
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.."
ஆண்டாள் திருமணம் பங்குனி உத்திர திருநாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோலவே மார்கழி மாதம் திருப்பாவை பாடலால் பெருமாளை மனமுருக பிரார்த்தித்து, பாவை நோன்பிருந்து ஆண்டாள் அந்த கண்ணனையே மணாளனாகக் கொண்டாள்.
'சூடிக்கொடுத்த சுடர் கொடியாள்' என அழைக்கப்படும் ஸ்ரீ ஆண்டாள் பெருமாள் பக்தர்களில் மிகச்சிறந்த பக்தை. சிறுவயது முதலே ஸ்ரீரெங்கநாத பெருமாளிடம் அளவற்ற பக்தியையும் பிரேமையும் கொண்டிருந்த இவள் எந்நேரமும் ஸ்ரீரெங்கநாதரின் நினைவுடனே இருந்தாள். எம்பெருமானைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை தன் தந்தையான விஷ்ணு சித்தரிடம் கேட்டு அறிந்து கொள்வாள்.
வைணவ ஆச்சாரியரும், தனது கடைசி நாட்களை ஸ்ரீரங்கத்தில் கழித்தவருமான ஸ்ரீராமனுஜர் ஸ்ரீ ஆண்டாளை பற்றி 'பாதங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதமனைத்திற்கும் வித்தாகும்-கோதைத்தமிழ் ஐதெய்ந்தும் அறியாத மானிடரே வையம் சுமப்பதும் வம்பே' என்று பாடியுள்ளார்.
'வேதம் அனைத்திற்கும் வித்து கோதையே' என்று மற்றுமொரு வைணவ பெரியவர் கூறியுள்ளார்.
ஆயர்பாடியில் கோபியர்கள் பாவை நோன்பிருந்து ஸ்ரீ கண்ணனை அடைந்ததை ஸ்ரீ ஆண்டாள் அறிந்து, தன்னையும் கோபியருள் ஒருத்தியாகவும், ஆழ்வாருடைய திருமாளிகையே ஆயர்பாடியாகவும், பெருமாளையே கண்ணனாகவும் எண்ணி மார்கழி முதல் நாள் முதல் அதிகாலையில் எழுந்து நோன்பு பற்றிய பாசுரங்கள் பாடி பூஜித்தாள். அவையே திருப்பாவையாகும்.
ஆண்டாள் மார்கழி 30 நாளும் இவ்வாறு விரதம் இருந்து பூஜை செய்து ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்க பெருமானுடன் ஐக்கியமானாள்.
அதை நினைவூட்டும் விதமாக ஆண்டாள் வீற்றிருக்கும் அனைத்து கோவில்களிலும் மார்கழி மாத கடைசி தினம், அதாவது 'போகி' அன்று ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் திருமணம் நடைபெறும், இதையே 'போகி கல்யாணம்' என்றும் கொண்டாடுகிறார்கள்.
மார்கழி மாதத்தில் பகல் பத்து, ராப்பத்து உத்சவங்கள் நடந்தேறும் வேளையில், ஆண்டாள் உத்சவமும் நடைபெறும். அதன்படி ஆண்டாளுக்கு போகி அன்று திருக்கல்யாணம் நடத்தப்படும். அன்று ஆண்டாளுக்கு எண்ணை காப்புடன் நீராட்டு உத்சவம் நடைபெறும். இதற்காகவே அன்று சிறப்பு ஹோமங்கள் நடைபெறும்.
பின்னர் ஆண்டாள் மாடவீதிகளில் வலம் வந்த பின்னர் முறைப்படி மாலை மாற்று நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து திருமணமும் நடந்தேறும்.
நோன்பிருந்து பெருமாளை மணந்த ஆண்டாளின் பக்தியை உணர்த்தும் விதமாக இந்த போகி கல்யாணம் அனைத்து கோவில்களிலும் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்த உத்சவம் சிறப்பாக நடைபெறும். அன்று திருப்பதியில் இருந்து ஆண்டாளுக்கு சிறப்பு மலர்மாலைகள் வரும். அதுபோலவே, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் போகி கல்யாணம் விமரிசையாக நடைபெறும்.
சாதாரண மனிதருடன் திருமணம் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காது, அந்தக் கண்ணனையே மனதில் வடித்து அவனையே கரம் பிடித்த ஆண்டாளின் பக்தியையும், பெருமாள் மீது கொண்டிருந்த அன்பையும் போகி கல்யாணத்திலும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
மார்கழியில் விரதமிருந்து, கண்ணனையே மனதார பிரார்த்தித்து, அவனையே பதியாகக் கொண்ட ஆண்டாளைப் போலவே, திருமணமாகாத பெண்கள் பாவை நோன்பிருந்து போகி அன்று அதாவது நாளை (சனிக்கிழமை) நடக்கும் திருமணத்தில் ஆண்டாளையும் பெருமாளையும், திருமணக் கோலத்தில் தரிசித்தால் திருமண வரம் கிடைக்கும். ஆண்டாளுக்கு அருளிய கண்ணன், உங்கள் திருமண பிரார்த்தனையையும் நிறைவேற்றுவான்.