என் மலர்
கதம்பம்
தெய்வம் படும் பாடு..
- சோழ நாட்டிலுள்ள திருநாகேச்சுரத்தில் சிறந்த திருமால் கோவில் ஒன்றுண்டு. திருவிண்ணகர் என்பது அதன் பழம்பெயர்.
- உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்ற கருத்தும் பரவலாயிற்று.
தெய்வம் படும் பாடு தெய்வத்துக்குத் தான் தெரியும். அடியார் கையில் அகப்பட்டு எத்தனை அடியும், அவதியும் பட்டிருக்கிறது தெய்வம்..!
எத்தனை ஏச்சும் பேச்சும் கேட்டிருக்கிறது..!
தொண்டர் என்று பேர் படைத்த மிண்டர்களுள் ஒருவன் தெய்வத்தைக் கல்லால் எறிந்தான்;
மற்றொருவன் பிரம்பால் அடித்தான்;
பித்தன் என்று ஏசினான், இன்னொரு தொண்டன்.
"தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே".
கும்பகோணத்திற்கு அருகே சத்தி முற்றம் என்ற சிற்றூர் உள்ளது. அங்குள்ள சிவாலயம் பாடல் பெற்றது. "சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே" என்று பாடினார் திருநாவுக்கரசர். நாளடைவில் சத்தி முற்றம் என்ற பெயர் 'சத்திமுத்தம்' ஆயிற்று.
அதிலிருந்து உருவெடுத்தது ஒரு காதற்கதை! சத்தியாகிய உமாதேவி ஈசனைக் காதலித்து முத்தமிட்ட இடம் அதுவே என்ற முடிவு கட்டினர் சிவனடியார். அதற்கு அடையாளமாகச் சத்தி சிவனை முத்தமிடும் கோலத்தில் அமைந்த திருவுருவமும் அவ்வாலயத்தில் நிறுவப்பெற்றது. அடியார்மீது வைத்த கருணையால் சத்தியின் முத்தத்தையும் சகித்துக் கொண்டு அந்த ஆலயத்துள் அமர்ந்திருக்கின்றார் ஈசன்.
சோழ நாட்டிலுள்ள திருநாகேச்சுரத்தில் சிறந்த திருமால் கோவில் ஒன்றுண்டு. திருவிண்ணகர் என்பது அதன் பழம்பெயர். ஆழ்வார்களுள் நால்வர் அத்திருப்பதியைப் பாடியருளினர்.
"திருவிண்ணகர் சேர்ந்த அப்பன், தன் ஒப்பார் இல்லப்பன்" என்று நம்மாழ்வார் பாடிப் போற்றினார். அவர் திருவாக்கின் அடியாக 'ஒப்பிலியப்பன்' என்ற திருநாமம் அப்பெருமாளுக்கு அமைந்தது. காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்பது 'உப்பிலியப்பன்' என மருவிற்று. உப்பிலியப்பன் கோவில் என்ற பெயரும் அவ்விண்ணகருக்கு அமைந்தது.
உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்ற கருத்தும் பரவலாயிற்று. அதன் விளைவாக இன்றும் உப்பில்லாத திருவமுதை அப்பெருமாளுக்கு அளிக்கின்றார்கள். ஒப்புவமையில்லாத் தலைவன், அடியார் தரும் உப்பில்லாத உணவையும் உட்கொண்டு, தியாகத்தின் திருவுருவாக அத்திருப்பதியிலே காட்சி தருகின்றார்..!
-ரா.பி.சேதுப்பிள்ளை