என் மலர்
கதம்பம்

குடிசையில் கிடந்த கோஹினூர்

- எதிர்பாராமல், ஊர் சுற்றும் சந்நியாசி ஒருவர் விவசாயி குடிசையில் தங்க நேர்ந்தது.
- கோஹினூர் வைரம் தான் இந்த உலகத்திலேயே முதலாவதாக உள்ளது.
கோஹினூர் - அதாவது உலகின் மிகப்பெரிய வைரமானது மூன்று வருடங்களாக ஒரு விவசாயின் வீட்டில் கவனிப்பாரற்றுக் கிடந்தது. அவருடைய குழந்தைகள் அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஏனென்றால் அவருக்கு அது ஒரு வைரம் என்று தெரியாது, அது ஒரு அழகான கல்லைப்போன்றுதான் தோன்றியது. ஆகவே அதைத் தன் குழந்தைகளிடம் கொடுத்து விட்டார்.
எதிர்பாராமல், ஊர் சுற்றும் சந்நியாசி ஒருவர் அவனது குடிசையில் தங்க நேர்ந்தது. அவரால் அவரது கண்களை நம்ப முடியவில்லை. அந்த சந்நியாசி, சந்நியாசி ஆவதற்கு முன் ஒரு நகைத்தொழிலாளியாக இருந்தார். அவர் விவசாயியைப் பார்த்து "உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? நான் மிகப்பெரிய வைரங்களை பார்த்திருக்கிறேன், ஆனால் எனது வாழ்நாளில் இதைப்போன்ற தொரு வைரத்தை நான் இதுவரைப் பார்த்ததில்லை" என்று கூறினார்.
அதற்கு அந்த விவசாயி, "இது இங்கே மூன்று ஆண்டுகளாகக் கிடக்கிறது. ஒரு நாள் நான் இதை எனது வயலில் கண்டெடுத்தேன். எனது வயலில் ஒரு சிறு ஓடை ஓடுகிறது. அந்த ஓடையின் மணலில் இதை நான் கண்டேன். இதை எனது குழந்தைகளுக்காக வீட்டிற்கு எடுத்து வந்தேன். எனவேதான் அவர்கள் அதை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார். இது நடந்தது கோல்கொண்டா என்கிற சிறிய கிராமத்தில்.
உடனே அந்த இடத்தின் ராஜவான ஐதராபாத் நிஜாமிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வைரங்களின் பிரியர். அவராலும் அவரது கண்களை நம்ப முடியவில்லை. அவர் அந்த விவசாயிக்கு பல லட்சக்கணக்கான ரூபாய்கள் பரிசளித்தார்.
இப்போது அந்தக் கோஹினூர் வைரம் தான் இந்த உலகத்திலேயே முதலாவதாக உள்ளது. அது பிரிட்டிஷ் ராணியின் கிரீடத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இப்போது அது அதன் ஆரம்பகால எடையில் மூன்றில் ஒரு பங்கு தான் உள்ளது. மற்ற மூன்றில் இரண்டு பகுதி என்னவாயிற்று?
மூன்றில் இரண்டு பகுதி அதை மெருகேற்றுவதிலும், பட்டை தீட்டுவதிலும் வெட்டப்பட்டு விட்டது. மூன்றில் இரண்டு பகுதி மறைந்து விட்டது, ஆகவே மூன்றில் ஒரு பகுதிதான் உள்ளது. ஆனால் எவ்வளவுக்கெவ்வளவு அது பட்டை தீட்டப்பெறுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு மதிப்பு அதிகமாகிறது. அது முதலில் இருந்ததை விட இப்போது தான் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.
- ஓஷோ