என் மலர்
கதம்பம்
நல்வாழ்வளிக்கும் வாழ்த்து
- வாழ்த்தின் மூலம் தேவையான நன்மைகளும் கிட்டும்.
- மனவளம் பெருகுவது நிச்சயம்.
வாழ்த்து எல்லா மந்திரங்கட்கும் மேலான திருமந்திரமாகும். ஒருவரை நாம் வாழ்த்தும் போது அந்த உயிருக்கும் நம் உயிருக்கும் ஒரு உயிர்த் தொடர்பு ஏற்பட்டு வாழ்த்து அதன் மூலம் பாய்ந்து வேலை செய்யும். இந்த வாழ்த்து பேரறிவில் பதிவாகி அதன் மூலம் அடி மனதிற்கும் பரவி நாளாக நாளாக நட்புணர்ச்சி வளர உதவும். வெறுப்புணர்ச்சி தானே மறைந்துவிடும்.
ஒற்றுமையின்றி பிணங்கி நிற்கும் ஒரு மகனைத் தந்தை தினசரி வாழ்த்திக் கொண்டே இருப்பாரானால் இருவருக்குமிடையேயுள்ள உயிர்த் தொடர் மூலம் அவ்வாழ்த்துப் பரவி மகனுடைய மூளையில் பதிந்து அவனைச் சிறுகச் சிறுகத் திருத்தி தகப்பன் விருப்பப்படி நடக்கும்படி செய்துவிடும். கணவன் மனைவியிடையேயும் இப்படித்தான். இது நான் அனுபவமாக பல குடும்பங்களில் கண்ட உண்மையாகும்.
வாழ்த்தின் மூலம் தேவையான நன்மைகளும் கிட்டும். ஆதலால்தான் கடவுளைக் கூட வாழ்த்தும் பக்தர்களையும் பக்திப்பாடல்களையும் நாம் பார்க்கிறோம். கடவுளை வாழ்த்துவதன் மூலம் எல்லோரையும் வாழ்த்தும் நற்பழக்கத்தை மனிதன் ஏற்படுத்திக் கொண்டான். இதனால் மனவளம் பெருகுவது நிச்சயம்.
- வேதாத்திரி மகரிஷி.