search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    அறிவும் ஆசையும்!
    X

    அறிவும் ஆசையும்!

    • நீதியை மறைக்கும் குற்றங்கள் இரண்டு.
    • நீதியின் வடிவாக உள்ளவன் இறைவன்.

    அறிவு, நீதியைச் சார்ந்து தெய்வத் தன்மையோடு விளங்குவது.

    ஆசை, அநீதியைச் சார்ந்து விலங்குத் தன்மையோடு இருப்பது.

    அறிவு இருக்கின்ற இடத்தில் அன்பு விளங்கும்.

    ஆசை இருக்கின்ற இடத்தில் வஞ்சகம் இருக்கும்.

    நீதிக்கும் அநீதிக்கும் நடக்கின்ற போர் எப்போதும் ஓயாது இருக்கும்.

    அறிவு விஞ்சுகின்ற போது தெய்வத் தன்மை விளங்கும்.

    ஆசை விஞ்சுகின்ற போது விலங்குத் தன்மை இருக்கும்.

    நாம் தெருவிலே நடந்து போய்கொண்டு இருக்கின்ற போது ஒரு பையைக் காண்போம். பையிலே உள்ளதை அறிந்து கொள்ள ஆசை மேலிடும். அதிலே நிச்சயம் பணம் அல்லது பணமதிப்பு உள்ள பொருள் காணப்படும்.

    இப்போது ஆசைக்கும் அறிவுக்கும் இடையே போர் மூளும்.

    இது யாரோ உழைத்துச் சேர்த்த பொருள். இதை இழந்தவர் வருத்தப்படுவார். இதற்கு உரியவர் யார் என்று அறிந்து அவரிடம் சேர்த்து விடவேண்டும் என்று அறிவு சொல்லும். பையைத் துழாவிப் பார்த்தால் ஒரு முகவரி இருக்கும். மனம் நிம்மதி அடையும்.

    ஆனால், ஆசை விடாது தனது போர்க்குணத்தைக் காட்டும். அந்தப் பை கிடைத்தது தமது அதிருஷ்டம் என்று வியக்கும்.

    இந்தப் போராட்டத்தில் வெற்றி கொள்வது அறிவாக இருந்தால் நீதி தழைக்கும். ஆசையாக இருந்தால் அநீதி தாண்டவம் ஆடும்.

    நீதியை மறைக்கும் குற்றங்கள் இரண்டு.

    ஒன்று அறியாமை, மற்றொன்று வஞ்சகம்.

    அறியாமை பாவம் அல்ல. அறியாமை என்பது நீக்கிக் கொள்ளக் கூடிய குற்றம் ஆகிறது.

    ஆனால், வஞ்சகம் பெரும் குற்றம் ஆகும். அது நரகத்துக்கு வித்தாக அமைகிறது.

    வழியில் கண்டு எடுத்த பொருளை உரியவரிடம் ஒப்படைப்பதே நீதி என்று அறிவு சொல்லுகின்றது.

    வஞ்சகம் அந்த அறிவை மழுங்கச் செய்கிறது. வஞ்சகம் ஒரு கணத்தில் மனதைத் தன் வசப்படுத்திவிடும்.

    நாம் அதனைச் சிறை செய்து அறிவினிடம் ஒப்புவிக்க வேண்டும்.

    நீதியின் வடிவாக உள்ளவன் இறைவன்.

    நீதியோடு சம்பந்தப்பட்டவன் இறைவனோடு சம்பந்தப்பட்டவன் ஆகிறான்.

    -பி.டி.அரசு

    Next Story
    ×