search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    தாழம்பூவின் சிறப்புகள்
    X

    தாழம்பூவின் சிறப்புகள்

    • தாழக்குடி போன்ற ஊர் பெயர்களின் காரணம் தாழைமரங்கள் அடர்ந்து இருந்ததால் வந்த பெயர்கள் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
    • மாக்காப்பு அலங்காரத்தில் தலையில் கிரீடமாக சூடப்படுவது தாழம்பூ தான்.

    பூக்களில் ஆண் மலர், பெண்மலர் என வகைகள் கொண்ட மலர் தாழம்பூ.. செந்தாழம்பூ என்றால் சிகப்பு கலரில் இருப்பதாக நினைக்க வேண்டாம். வெண்மை, மஞ்சள் ஆகிய இரு வண்ணத்தில் காணப்படும் மலர். மஞ்சள் நிறத்தில் பூக்கும் மலர் ஆண் மலர் (செந்தாழம்பூ) என்றும் வெண்மை நிறத்தில் பூப்பது பெண்மலர் எனவும் அழைக்கப்படுகிறது.

    ஆற்றோரம், சுனைகள், ஊற்று, கால்வாய்க்கரை, கடற்கரை ஆகிய நீர்நிலை பகுதிகளில் வளரும் மரம்.. திருநெல்வேலி மாவட்டத்தில் தாழை ஊற்று (தாழையூத்து), பெரியதாழை, கூடுதாழை மற்றும் கன்னியாக்குமரி மாவட்டத்தில் தாழக்குடி போன்ற ஊர் பெயர்களின் காரணம் தாழைமரங்கள் அடர்ந்து இருந்ததால் வந்த பெயர்கள் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.

    திருச்செந்தூர் அருகே மேலப்புதுக்குடியில் உள்ள அருஞ்சுனைகாத்த அய்யனார் முற்காலத்தில் தாழையடி அய்யனாா் என்றே அழைப்பார்கள்..சுனையின் அருகாமையில் தாழமரங்கள் நிறைந்து இருப்பதை இப்போதும் காணலாம்.

    தாழையை கவனக்குறைவாக தொடும்போது இலையில் இருக்கும் முள் கையை தைக்கும் என்பதால் இதை "கைதை" என தமிழில் முன்பும், மலையாளத்தில் தற்போது வரை குறிப்பிடுகின்றார்கள். அன்னாசி பழத்தை கைதை செத்தை என மலையாளத்தில் சொல்வார்கள்.. அன்னாசி மரமும் தாழை இனத்து வகையே.

    சிவபெருமானின் பூஜைக்கு உகந்த மலர் இல்லை என்றாலும் மற்ற தெய்வங்களின் பூஜைக்கு தாழம்பூவை பயன்படுத்துவார்கள். குறிப்பாக கன்னியாக்குமரி மாவட்டத்தில் சுடலைமாடசுவாமிக்கு சாத்தப்படும் மாக்காப்பு அலங்காரத்தில் தலையில் கிரீடமாக சூடப்படுவது தாழம்பூ தான்.

    தாழம்பூ அதிக மணம் கொண்டது.. இந்த பூவில் சிறிய பூநாகம் இருக்கும். நல்ல பாம்பை விட விசம் கொண்டது. தாழம்பூவை பறித்து தரையில் தட்டிய பின்னர் தான் எடுக்க வேண்டும். இல்லையெனில் பூநாகம் தீண்டும் என்ற பழைய பாட்டி கதை உண்மையா, பொய்யா தெரியாது..

    அதிக மணம் கொண்ட மலராக இருந்தாலும் பெண்கள் இதனை தலையில் சூடுவதில்லை. சூடினால் தலைவலியை தரும் மலர். மணம் மட்டுமல்ல மருத்துவ குணமும் கொண்ட மலர். பித்தம் அதிகம் ஆகி வரும். உடல் சூட்டு நோய்களை குணமாக்க தாழம்பூவை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி பசும்பாலில் கலந்து குடிப்பதை மருந்தாக சித்த மருத்துவம் சொல்கிறது.

    ஒய்யாரக்கொண்டையில் தாழம்பூவாம். உள்ளே இருப்பது ஓராயிரம் ஈறும் பேனுமாம்.. என உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி போலியாக நடப்பவர்களை பற்றி தமிழில் தாழம்பூவை வைத்து பழமொழியும் உண்டு.

    -என்.வி.டி. அண்ணாச்சி

    Next Story
    ×