search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    நினைத்ததை சாதித்த எம்.ஜி.ஆர்!
    X

    நினைத்ததை சாதித்த எம்.ஜி.ஆர்!

    • மந்தைவெளியில் உள்ள கபாலி தியேட்டரில் ஒரு ஆங்கிலப்படம் ஓடிக் கொண்டிருந்தது.
    • பிளாட்பாரத்தில் படுத்திருக்கும் அந்த நேரத்திலும் எம்ஜிஆரின் இந்த தன்னம்பிக்கையைக் கண்டு அசந்து போனாராம் தங்கவேலு.

    பிளாட்பாரத்தில் நியூஸ் பேப்பரை விரித்து படுத்திருந்தார் எம்ஜிஆர்.

    பக்கத்தில் நகைச்சுவை நடிகர் கே.ஏ. தங்கவேலு.

    இது எம்ஜிஆர் திரையுலகத்திற்கு வருவதற்கு முன், நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது நடந்த சம்பவம்.

    எம்ஜிஆர் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் வடசென்னையில் ஒத்தவாடை என்ற இடத்தில் தங்கியிருந்தார்.

    சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனை தாண்டி வெகு தொலைவில் இருக்கிறது அந்த இடம். தங்கவேலுவும் அங்கேதான் தங்கி இருந்தார்.

    அப்போது மந்தைவெளியில் உள்ள கபாலி தியேட்டரில் ஒரு ஆங்கிலப்படம் ஓடிக் கொண்டிருந்தது.

    அதைப் பார்க்க ஆசைப்பட்டாராம் எம்ஜிஆர். கூடவே தங்கவேலுவை அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.

    படம் முடிந்தது.

    'அடடா' என்றார் தங்கவேலு.

    "என்ன அண்ணே?"


    "நேரம் ஆயிடுச்சே. நாம தங்கியிருக்கற இடத்துக்கு போக வேண்டிய கடைசி பஸ் போயிடுமே..."

    "வாங்கண்ணே. சீக்கிரம் பஸ் ஸ்டாண்டுக்கு போகலாம்."

    தியேட்டரிலிருந்து விரைவாக மயிலாப்பூர் பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து வந்தார்கள். அப்படியும் இவர்கள் வந்து சேர்வதற்குள் கடைசி பஸ் புறப்பட்டு போய்விட்டது.

    'இப்போது என்ன செய்வது' என்றார் தங்கவேலு. நாம் தங்கியிருக்கும் இடத்திற்கு நடந்தே போய்விடலாமா ?

    ஒத்தவாடை இங்கிருந்து வெகு தொலைவில் இருக்கிறது. நடந்து போவதற்குள் விடிந்து விடும்.

    ஒன்று செய்தால் என்ன ? இங்கேயே மயிலாப்பூரில் தங்கிக் கொள்ளலாம். அதிகாலை 5 மணிக்கு மேல் வரும் முதல் பஸ்ஸில் ஏறி போய்விடலாம் என்றார் எம்ஜிஆர்.

    வேறுவழியின்றி தங்கவேலுவும் சம்மதித்தார். எல்லாம் சரி இப்போது எங்கே படுப்பது ?

    எம்ஜிஆர் ஒரு சிறிதும் யோசிக்காமல் தன் கையில் வைத்திருந்த செய்தித்தாள்களை காட்டினார்.

    "இதோ, இதை விரித்து இந்த பிளாட்பாரத்தில் படுத்துக்கொள்ளலாம் அண்ணே."

    அடுத்த நிமிடமே கொஞ்சமும் தயங்காமல் மயிலாப்பூர் பிளாட்பாரத்தில் நியூஸ் பேப்பரை விரித்து எம்ஜிஆரும் தங்கவேலுவும் படுத்துக் கொண்டார்களாம்.

    தூக்கம் வராமல் கொஞ்ச நேரம் கழித்து திரும்பிப் பார்த்தார் தங்கவேலு.

    எம்ஜிஆர் ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.

    என்ன என்று கேட்டிருக்கிறார் தங்கவேலு.

    எம்ஜிஆர் சொன்னாராம்: "அண்ணே, இன்றைக்கு இந்த ரோட்டில் படுத்திருக்கும் இதே ராமச்சந்திரன், ஒருநாள் இந்த நாட்டையே ஆளப் போகிறான்."

    ஆச்சரியப்பட்டு போனார் தங்கவேலு.

    படுப்பதற்கு ஒரு இடம் இல்லை. பாயும் தலையணையும் கூட இல்லை. செய்தித்தாளை விரித்து பிளாட்பாரத்தில் படுத்திருக்கும் அந்த நேரத்திலும் எம்ஜிஆரின் இந்த தன்னம்பிக்கையைக் கண்டு அசந்து போனாராம் தங்கவேலு.

    எனக்கும் கூட இதைப் படித்தபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது.

    எவ்வளவு அசாத்திய தன்னம்பிக்கையும், அசைக்க முடியாத நேர்மறை எண்ணங்களும் இருந்திருந்தால் எம்ஜிஆர் இப்படி சொல்லி இருக்க முடியும் !

    எம்ஜிஆர் ஒரு லட்சியத்தை நினைத்தார். அதை அடைவதற்காக அதை நோக்கி பயணமும் செய்தார்.

    நாம் எதை நோக்கி தீவிரமாக பயணம் செய்கிறோமோ, அதுவும் நம்மை நோக்கி தீவிரமாக பயணம் செய்கிறது.

    இந்தத் தகவலை என்னிடம் பகிர்ந்துகொண்டவர் தயாரிப்பாளர் வி.சி. குகநாதன்.

    - ஜான் துரை

    Next Story
    ×