என் மலர்
கதம்பம்
பூமியை அச்சுறுத்தும் வெப்பம்
- அறிவியல் தகவல்கள் தெளிவாக இருக்கின்றன.
- பிழைத்திருக்க வேண்டுமானால் உலகின் வெப்பநிலை உயர்வை குறைந்தபட்சம் 1.5 டிகிரிக்குள்ளாகவேனும் கட்டுப்படுத்த வேண்டும்.
நெருப்பு கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. நாம் நீந்திக்கொண்டிருக்கும் பானையிலிருக்கும் நீர் கொதிக்கும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
நீரில் அவித்த முட்டையை எப்படி மீண்டும் பழைய நிலைக்கு உயிர்ப்பிக்க முடியாதோ அதுபோலவே மீளமுடியாத நிலையை நாமும் நம் அன்புக்குரியவர்களும் வேகமாய் நெருங்கிக்கொண்டிருக்கிறோம்.
இது குடுகுடுப்பைக்காரனின் எதிர்காலம் குறித்த உளறல் அல்ல. அறிவியல் தகவல்கள் தெளிவாக இருக்கின்றன.
வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பமான 10 ஆண்டுகளாகக் கடந்த 10 ஆண்டுகளும், அவற்றில் அதிவெப்பமான ஆண்டாக 2024 ஆம் ஆண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
பிழைத்திருக்க வேண்டுமானால் உலகின் வெப்பநிலை உயர்வை குறைந்தபட்சம் 1.5 டிகிரிக்குள்ளாகவேனும் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு நிபந்தனை 50 விழுக்காடு கார்பன் உமிழ்வுக் குறைப்பாக இருக்க வேண்டும். ஆனால் நாம் 1.3 விழுக்காடு கடந்த ஆண்டைவிட அதிகம் உமிழ்ந்திருக்கிறோம். 2025 இல் இன்னும் அதிகமாக உமிழ்வோம்.
இன்னொருபுறம், இவைகுறித்த எந்த பிரக்ஞையுமின்றி புத்தாண்டு வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண வாழ்த்துக்களென்று ஒவ்வொருவரும் நீடூழி வாழ ஆசி வழங்கிக்கொண்டிருக்கிறோம்.
ஷேர் மார்க்கெட் முதலீடுகள் குறித்தும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் பேசிக்கொண்டிருக்கிறோம். எல்லாவற்றிலும் உச்சமாய் சாவுக்குக் கையளிப்பதற்காய் பிள்ளைகளையும் பெற்றுக்கொண்டிருக்கிறொம்.
எவ்வளவு பெரிய முட்டாள்தனங்கள்?
மானுடகுலத்தின் பகுத்தறியும் திறன், அறிவியல் தொழில்நுட்பங்கள், சமூக – அரசியல் நிறுவனங்கள் அனைத்தும் 350 கோடி ஆண்டுகள் நீண்ட உயிரினங்களின் பரிணாமத் தொடர்ச்சியைத் தக்க வைப்பதில் மாபெரும் தோல்வியடைந்து வருகின்றன.
-ஜியோ டாமின்