என் மலர்
கதம்பம்
குழந்தையை பார்க்கலையா..?
- பாலச்சந்தர் எதுவும் பேசாமல் நாகேஷ் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
- துன்பங்களையும் துயரங்களையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டுதான், நம்மையெல்லாம் சிரிக்க வைத்திருக்கிறார் நாகேஷ் !
நாகேஷ் தனது முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லையாம்.
ஏதேதோ காரணங்களைச் சொல்லி தவிர்த்து விட்டு, நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்கத்திற்குப் போய்விட்டார்.
அங்கே இருந்த பாலசந்தருக்கு ஆச்சரியம்.
"நாகேஷ்... இன்னும் நீ உன் குழந்தையைப் பார்க்கப் போகவில்லையா ?"
சற்று நேர அமைதிக்குப் பின்,"இல்லை" என்று மெல்லிய குரலில் சொன்னாராம் நாகேஷ்.
"ஏன் ?"
கலங்கிய கண்களுடன் பாலச்சந்தரை நிமிர்ந்து பார்த்த நாகேஷ் தழுதழுத்த குரலில் சொன்னாராம் :
"கொஞ்சம் என் முகத்தைப் பாருங்கள். முழுவதும் அம்மைத் தழும்புகள்."
பாலச்சந்தர் எதுவும் பேசாமல் நாகேஷ் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
"இந்த முகத்தோடு நான் என் குழந்தையைப் பார்க்கப் போனால்... அந்தச் சின்னஞ்சிறு குழந்தை பயந்து போய் விடாதா ? அதனால்தான் நான் என் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லை."
கண்ணீர் ததும்பும் கண்களோடு நாகேஷ் இப்படிச் சொல்லவும் கலங்கிப் போய் விட்டாராம் பாலச்சந்தர் .
கொஞ்ச நேரத்துக்குப் பின், நண்பன் நாகேஷை சமாதானம் செய்தாராம்.
"நாகேஷ், உனக்கு உன் நடிப்புத்தான் அழகு. கவலைப்படாதே !
புறப்படு. முதலில் போய் உன் குழந்தையைப் பார்த்து, தூக்கிக் கொஞ்சி விட்டு, அப்புறம் ஷூட்டிங்குக்கு வா" என்று உற்சாகம் கொடுத்து அனுப்பி வைத்தாராம் பாலச்சந்தர்.
இவ்வளவு துன்பங்களையும் துயரங்களையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டுதான், நம்மையெல்லாம் சிரிக்க வைத்திருக்கிறார் நாகேஷ் !
ஆம்."சிரிப்பவர்கள் எல்லோரும் கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை ; கவலையை மறக்கக் கற்று கொண்டவர்கள் !"
-ஜான்துரை ஆசீர் செல்லையா