search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    அறிவியல் பேசுங்கள்!
    X

    அறிவியல் பேசுங்கள்!

    • கதைகள் என்ன? அவர்கள் பார்க்கும் செய்திகள் என்ன? கொஞ்சம் அலசுவோம்.
    • கடைசியாக தமிழ் நடிகர்கள் சிலரது சமீபத்திய படங்களின் பெயர்களைச் சொன்னேன்.

    நம் வீட்டுப் பிள்ளைகளுடன் நாம் என்ன பேசுகிறோம்? இந்த சமூக வலைதள உலகத்தில் அவர்கள் கேட்கும் கதைகள் என்ன? அவர்கள் பார்க்கும் செய்திகள் என்ன? கொஞ்சம் அலசுவோம்...

    என்னுடைய வகுப்பறையில் ஈர்ப்பியல் பாடம் நடத்திக் கொண்டு இருந்தேன். அப்பொழுது gravity என்ற ஒரு ஆங்கிலப் படம் வந்துள்ளது பார்த்தீர்களா? என்றேன். 100 பேரில் ஒருத்தர் தான் பார்த்தேன் என்றார். ' Interstellar ' என்று ஒரு படம் வந்தது. அதை யாரெல்லாம் பார்த்தீர்கள் என்று கேட்டேன். ஒருவரும் பார்க்கவில்லை என்றனர்.

    கடைசியாக தமிழ் நடிகர்கள் சிலரது சமீபத்திய படங்களின் பெயர்களைச் சொன்னேன். அனைவரும் ஒரே குரலில் பார்த்தோம் என்றனர்.

    ஏன் இந்த நாடு இன்னும் உலக நாடுகளிடம் இருந்து அறிவியலையும், புதிய கண்டுபிடிப்புகளையும் பிச்சை எடுக்கிறது தெரியுமா? என்றேன். அனைவரும் மவுனமாக இருந்தனர்.

    பாவம்... எதைப் பார்க்க வேண்டும்? எதைப் பற்றிப் பேச வேண்டும்? எதையெல்லாம் தேடி ஓட வேண்டும்? என்று நமக்கே (ஆசிரியர்கள், பெற்றோர்கள்) தெரியாத பொழுது, நம் பிள்ளைகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

    அறிவியலை எந்த நாடு கொண்டாடுகிறதோ, அதுவே எப்பொழுதும் உலகை ஆளும் தகுதி பெறும்.

    சமூக வலைதளங்களில் நாம் பார்ப்பவை என்ன? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...

    "அந்த சினிமா கதை எப்படி உருவானது தெரியுமா?".. இயக்குனர் பகீர் தகவல்...


    "அந்த படத்தில் நடித்த நடிகைக்கும் நடிகருக்கும் கெமிஸ்ட்ரி எப்படி இருந்தது தெரியுமா?"... இயக்குனர் சுவாரசிய தகவல்...

    "அந்த பாடல் வரியை எப்படி உருவாக்கினோம் தெரியுமா?"... பாடல் ஆசிரியர் பேட்டி...

    "இந்த இசை எப்படி பிறந்து தெரியுமா?"..படத்தின் இசை குறித்து கதை ஆசிரியரின் கதை...

    "அந்த நடிகர் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறினார் தெரியுமா?"

    அந்த நடிகர் சொன்ன குட்டிக் கதை...

    "அந்த நடிகர் யார் வீட்டுக் வந்தாலும் சோறு போடுவார் தெரியுமா?"... என்றார் இந்த நகைச்சுவை நடிகர்...

    "அந்த நடிகர் அவர் காலில் பட்ட அழுக்கை அவரே துடைத்துக் கொண்டார் தெரியுமா?"...

    "அந்த நடிகர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?"...

    " அந்த நடிகைக்கு இவர் எத்தனாவது கணவர் தெரியுமா?"...

    வாழ்க்கை என்றால் என்ன? விளக்கம் சொல்கிறார் இந்த இயக்குனர்...

    வாழ்கையில் சாதிப்பது எப்படி? விளக்குகிறார் அந்த நடிகர்...

    இதுபோன்ற சகிக்க முடியாத கன்றாவிகள் தான் கொட்டிக் கிடக்கின்றன சமூக வலைத்தளம் முழுவதும்...

    "இந்த பிரபஞ்சம் ஏன் தோன்றியது?"

    "உயிர் என்றால் என்ன?"

    "நட்சத்திரங்கள் ஏன் ஒளிர்கின்றன?"

    "மனம் என்றால் என்ன?"

    "பருவநிலை மாற்றம் ஏன் வருகிறது?"

    "புயல் ஏன் வீசுகிறது?"

    "நியூட்டனின் விதிக்கும் ஐன்ஸ்டீன் விதிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்ன?"

    "பொருளாதர கல்வி என்றால் என்ன?"

    "வணிகம் என்றால் என்ன?"

    இப்படி நம் பிள்ளைகளிடம் பேச, கேட்க, விவாதிக்க லட்சம் கேள்விகள் உள்ள பொழுது... ஏன் இந்த நடிகர் நடிகைகளின் வாழ்க்கை வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்...?

    ஏன் அறிவியல் மேதைகளின் வரலாறுகள், பேட்டிகள் கவனிக்கப்படாமல், கேவலம் இந்த நடிகர், நடிகளைகளின் கிசுகிசுக்களை கவனிக்க வேண்டி நிர்பந்திக்க படுகிறோம்?

    யார் இந்த இழிவான கதைகளை மட்டுமே நம் மீது திணிகின்றனர்?

    ஆக்கபூர்வமான கேள்விகளை நோக்கி நகருங்கள்...

    அறிவியலையும், அறவியலையும் நம் பிள்ளைகளுக்கு கற்பிக்கத் தொடங்குங்கள்...

    அறிவியல் மேதைகளே.. நமக்கான முன் மாதிரிகள் என்று நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்...

    புதிய வரலாற்றை அறிவியலின் வழியே எழுத தொடங்குங்கள்...

    -பேராசிரியர் ஆ. அருள் இனியன்

    Next Story
    ×