search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    தாயை ஏமாற்றிய சிவாஜியின் வேடம்
    X

    தாயை ஏமாற்றிய சிவாஜியின் வேடம்

    • ஒரு முதியவர் போல் உள்ளே நடந்து போகிறார்.
    • பக்தி பரவசத்தில் வந்திருப்பது தன் மகன் என்று அறியாமல் மரியாதையுடன் அழைத்து சென்று உணவு பரிமாறி வணங்குகிறார்.

    சாரதா ஸ்டூடியோவில் திருவருட்செல்வர் படப்பிடிப்பு. நடிகர் திலகம் திருநாவுக்கரசர் என்ற அப்பர் வேடத்தில் சிவனடியாராக நடித்துக் கொண்டிருக்கிறார்...

    படப்பிடிப்பு முடிந்து வேடத்தை கலைக்காமல் அன்னை இல்லம் நோக்கி காரில் செல்கிறார்.

    நடிகர் திலகம், டிரைவரிடம் வீடு வரை ஹாரன் அடிக்காமல் போய் உள்ளே செல்லாமல் வெளியே காரை நிறுத்து என்று சொல்கிறார். டிரைவரும் அவ்வாறே செய்கிறார்...

    எஜமானின் கார் வருவதைக் கண்டு அன்னை இல்ல காவலாளி கேட்டைத் திறக்கிறார்...

    கார் வீட்டிற்குள் வராமல் வெளியே நிற்பதைக் கண்டு காரின் அருகே ஓடி வருகிறார் காவலாளி.

    காரில் இருந்த நடிகர் திலகம் கீழே இறங்கி வாயில் விரலை வைத்து உஷ் என்று காவலாளிக்கு சைகை செய்து விட்டு...

    ஒரு முதியவர் போல் உள்ளே நடந்து போகிறார். வாசலை அடைந்ததும் குரலை மாற்றி "அம்மா தாயே " என்று குரல் கொடுக்கிறார்...

    குரல் கேட்டு வருகிறார் ராஜாமணி அம்மையார்..

    அம்மாவைக் கண்டதும், "தாயே நான் ஒரு சிவபக்தன். கைலாயமலை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்... வழியில் கிடைத்ததை சாப்பிடுவேன்.... ஒரு வாய் சோறு கிடைக்குமா" என்று கேட்கிறார்.

    பக்தி பரவசத்தில் வந்திருப்பது தன் மகன் என்று அறியாமல் மரியாதையுடன் அழைத்து சென்று உணவு பரிமாறி வணங்குகிறார்..

    சாமியார், சாப்பிடும் விதத்தை பார்த்து, நம்ம கணேசன் சாப்பிடுவதைப் போல் இருக்கிறதே என்று எண்ணி கூர்ந்து கவனிக்கிறார் ராஜாமணி அம்மாள்.

    எத்தனையோ முகபாவங்களை காட்டுபவர் அம்மாவின் முகம் மாறுதலைக் கண்டு சத்தம் போட்டு சிரிக்கிறார் நடிகர் திலகம்...

    அந்த சிரிப்பு சத்தம் கேட்டு சாப்பிடுவது தன் மகன் கணேசன் என்றுணர்ந்து பிரமிக்கிறார் ராஜாமணி அம்மாள்.

    -அண்ணாதுரை துரைசாமி

    Next Story
    ×