என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கதம்பம்
![நீங்க கோவிலுக்கு போகணும் அண்ணே... நீங்க கோவிலுக்கு போகணும் அண்ணே...](https://media.maalaimalar.com/h-upload/2022/09/20/1764838-mrradha.jpg)
நீங்க கோவிலுக்கு போகணும் அண்ணே...
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மளமளவென்று சிவாஜியுடனும் எம்.ஜி.ஆருடனும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து முடித்தார் எம்.ஆர். ராதா.
- தனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பல்வேறு கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து, பல சாதனைகளையும் சரித்திரங்களையும் படைத்தார்.
ரத்தக்கண்ணீர்.. எம்.ஆர். ராதாவின் அட்டகாசமான நடிப்பில் 1954-ல் வெளியான அந்தப்படம் அபாரமான வெற்றியை பெற்று ஆரவாரத்தோடு அதிக நாட்கள் ஓடியது.
ஆனாலும் அதற்குப் பின்னரும் எந்த பட அதிபரோ இயக்குனரோ எம்.ஆர்.ராதாவை நடிக்க அழைக்கவில்லை.
ஒரு பக்கம் பயம்.
எம்.ஆர். ராதாவை நம்மால் சமாளிக்க முடியுமா ?
இன்னொரு பக்கம் சந்தேகம்.
ரத்தக்கண்ணீரில் நடித்தது போல இன்னொரு வேடத்தில் அவரால் சிறப்பாக நடிக்க முடியுமா?
ஓரிரு மாதங்கள் அல்ல. மூன்று ஆண்டுகள் இப்படியே ஓடிப் போனதாம். எவரும் அவரை நடிக்க கூப்பிடவில்லை.
எம்.ஆர்.ராதாவும் அது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. ஆனாலும் அவரது நண்பர்கள் கவலைப்பட்டார்கள்.
"அண்ணே, இவ்வளவு சிறப்பா நடிச்சும் உங்களை யாரும் நடிக்க கூப்பிடலியே, அதனால ஏதாவது கோவிலுக்கு போய் நீங்க வேண்டிக்கிட்டா..."
இடை மறித்தார் எம்.ஆர்.ராதா.
"கோவிலுக்கு போய் வேண்டிக்கிட்டா..? பூசாரி புரொடுயூசர் ஆகி சான்ஸ் கொடுப்பாரா? இல்ல சாமி பைனான்ஸ் பண்ணி படம் எடுக்குமா ?"
நண்பர்கள் வாயடைத்து நின்றார்கள்.
"ஏண்டா பேச மாட்டேங்கறீங்க ?டேய், கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போய் இருந்தாலும் இருப்பேனே தவிர கோவிலுக்குள்ளே போய் ஒரு நாளும் நிக்க மாட்டேண்டா !"
ஆம். எம்.ஆர்.ராதா சொன்னது போலவே தனக்கான சினிமா வாய்ப்புகளை வேண்டி எந்தக் கோவிலுக்கும் போகவில்லை. எந்த சாமியையும் கும்பிடவில்லை.
அவர் முன் அப்போது இருந்த கடமைகளை குறைவில்லாமல் நிறைவுடனே செய்து கொண்டிருந்தார் எம்.ஆர். ராதா. இடைவிடாமல் தொடர்ந்து தனது குழு மூலம் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் ஏ.பி.நாகராஜன், வி.கே.ராமசாமி இருவரும் சேர்ந்து 'லட்சுமி பிக்சர்ஸ்' என்ற பெயரில் எம்.ஆர்.ராதாவை கதாநாயகனாக நடிக்க வைத்து "நல்ல இடத்து சம்பந்தம்" என்ற படத்தைத் தயாரித்தார்கள்.
குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம், நிறைய நாட்கள் ஓடி ஏகப்பட்ட லாபத்தை தயாரிப்பாளர்களுக்கு சம்பாதித்து கொடுத்து இருக்கிறது.
அவ்வளவுதான்.
காலம் மாறியது.
கதவுகள் திறந்தது.
"மாறுபட்ட வேடங்களிலும் எம்.ஆர். ராதா சிறப்பாக நடிப்பார். குறுகிய காலத்தில் படத்தைத் தயாரிக்க ஒத்துழைப்பு தருவார்" என்ற நம்பிக்கை பட அதிபர்களிடையே ஏற்பட ஆரம்பித்தது.
அப்புறம் என்ன ?
போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்து எம்.ஆர்.ராதாவை ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்தார்கள் தயாரிப்பாளர்கள்.
1959-ல், சிவாஜி கணேசனுடன் எம்.ஆர்.ராதா இணைந்து நடித்த "பாகப்பிரிவினை" வெளி வந்தது.
படம் சூப்பர் ஹிட்.
எம்.ஆர். ராதாவின் வாழ்க்கையிலும் அது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
மளமளவென்று சிவாஜியுடனும் எம்.ஜி.ஆருடனும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து முடித்தார் எம்.ஆர். ராதா.
தனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பல்வேறு கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து, பல சாதனைகளையும் சரித்திரங்களையும் படைத்தார்.
கடமையை கண்ணும் கருத்துமாக செய்வது என்பதுதான், ஆழ்மனதுக்கும், இந்த பிரபஞ்சத்துக்கும் பிடித்த அற்புதமான பிரார்த்தனை. அதை மட்டும் சரியாக செய்து வந்தால் காலம் ஒரு நாள் கை கொடுக்கும்...
-ஜான்துரை ஆசிர் செல்லையா