என் மலர்
கதம்பம்
எம்.ஆர். ராதாவின் துணிச்சல்...
- காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்த பெரியார், அண்ணா, சம்பத் மூவரும் தரையில் அமர்ந்தே ‘இழந்த காதல்’ என்ற அந்த நாடகத்தை ரசித்தனர்.
- திராவிடர் கழக மாநாடுகள் நூறு நடத்துவதும் சரி.. எம்.ஆர்.ராதா நாடகம் ஒன்னு நடத்துறதும் சரி என்று பாராட்டிப் பேசிவிட்டு அமர்ந்தார்.
நடிகவேள் எம்.ஆர்.ராதா இந்திய வரலாற்றிலேயே ஒப்பிட முடியாத தனித்துவம் மிக்க தைரியக்கலைஞன். அவர் வெறுமனே நடிப்பால் பெயர் பெற்றவரல்லர். கலகங்களை நிகழ்த்திய துணிச்சலாலும் தான் நம்பிய கொள்கைகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நேர்மைக்காகவும் பெயர் பெற்றவர். கதாநாயகர்கள் தொடங்கி தயாரிப்பாளர்கள் வரைக்கும் யாருக்கும் பயப்படாதவர்; பணிந்து போகாதவர். அவரை எந்த நடிகரோடும் ஒப்பிடவே முடியாது.
தான் நடித்த எந்தப் படத்தின் வெற்றி விழாக்களிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. காரணம் கேட்டால் 'வியாபார ரீதியாக வசூலைக்குவித்த படங்களுக்கே விழா கொண்டாடப்படுகிறதே தவிர, நன்றாக நடித்திருக்கிறோம் என்று விழா கொண்டாடப்படுவதில்லையே' என்றார்.
1966 -இல் தமிழக அரசின் சார்பில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு ராதா தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பரிசளிப்பதாய் இருந்தது. ஆனால், 'மொழி தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே, விருது வாங்கமாட்டேன்' என்று மறுத்துவிட்டார் ராதா.
நாடகத்தில் போலீஸ் வருவதுபோல காட்சி இருக்கும். அப்போது ராதா உடன் நடிப்பவர் பயப்படுவதுபோல நடிப்பார். உடனே ராதா வசனம் பேசுவார். 'ஏன்டா பயப்படுறே? போலீஸ்னா என்ன பெரிய கொம்பா? (ரசிகர்களைப் பார்த்து கைநீட்டி) எல்லாம் ஓசி டிக்கெட்ல முன்னாடி உட்கார்ந்திருக்கான் பாரு. காசு கொடுத்தவன்லாம் பின்னாடி உட்கார்ந்திருக்கான்' ராதாவின் இந்த நக்கல் தாங்காமல், ஓசி டிக்கெட்டில் வந்தவர்கள் எழுந்து செல்வதும் உண்டு.
அப்போதைய அரசு ராதாவின் நாடகங்களைக் கண்காணித்து ரிப்போர்ட் அளிக்குமாறு சிஐடிகளை அனுப்பியது. அவர்களும் நாடகம் ஆரம்பிக்கும் முன்னரே முதல் வரிசையில் வந்து குறிப்பெடுக்க அமர்ந்தார்கள். "எவன்டா அவன்? கவர்மெண்ட் ஆளு மாதிரி தெரியுது. போய் டிக்கெட்டு வாங்கியாரச் சொல்லு. முன்வரிசை டிக்கெட்15 ரூபாய்" தன் மேனேஜரிடம் சொல்லி அனுப்பினார் ராதா. அவரும் சிஐடிக்களிடம் சொன்னார். அவர்களும் டிக்கெட் வாங்கி வந்து பின் நாடகம் பார்த்தனர்.
மறுநாள் கமிஷனர் அருள் ராதாவைக் கூப்பிட்டு அனுப்பினார். அவர் மிகவும் கண்டிப்பானவர். டிபார்ட்மெண்ட்டே அவரைப்பார்த்து தொடை நடுங்கிய காலம் அது. "நாடகத்துக்கு வந்த சிஐடிக்களை 15 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு வர சொன்னீங்களா?"
" ஐயா நீங்க தப்பா நினைக்கக் கூடாது. சர்க்காருக்குப் புரியணும். நாங்க கலைஞர்கள். நாங்க பண்றது வியாபாரம். அந்த ஸ்தலத்திற்கு யார் வந்து உட்கார்ந்தாலும் காசு கொடுத்துத்தான் ஆகணும்"
கமிஷனருக்கு ராதாவின் வாதம் நியாயமாகப்பட்டது. அன்றும் நாடகம் நடந்தது. இரண்டு சிஐடிகள் வந்தார்கள். முன்வரிசை டிக்கெட்டை 100 ரூபாய் ஆக உயர்த்தினார் ராதா. 200 ரூபாய் கொடுத்த பின்பே அவர்கள் உள்ளே நுழைய அனுமதித்தார் ராதா.
குமாரபாளையத்தில் அப்போது நாடகம் நடந்துகொண்டிருந்தது. மேக்கப் ரூமில் இருந்த ராதாவிடம் மேலாளர் வேக வேகமாக ஓடி வந்தார். அவருக்கு மூச்சு வாங்கியது.
" பெரியார் வந்திருக்கார். கூடவே அண்ணாவும் ஈவிகே சம்பத்தும் வந்திருக்காங்க"
" எதுக்கு?"
" நாடகம் பார்க்கத்தான்"
" பார்த்துட்டுப் போகட்டும்"
" உட்கார வைக்க இடம் இல்லையே"
" அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்ற? இஷ்டம் இருந்தா தரையில் உட்கார்ந்து பார்க்கட்டும். இல்லைன்னா போகட்டும்"
" இல்ல அவங்க ரொம்பப் பெரியவங்க.." "என்னை விடப் பெரியவங்களா வேற யாரையும் நான் நினைத்துக்கூட பார்க்கறதில்லை"
மேனேஜருக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை. காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்த பெரியார், அண்ணா, சம்பத் மூவரும் தரையில் அமர்ந்தே 'இழந்த காதல்' என்ற அந்த நாடகத்தை ரசித்தனர்.
இடைவேளை நேரம்... மேடையேறினார் அண்ணா... "அழையா வீட்டில் நுழையா சம்பந்திகள் போல நாங்கள் வந்துள்ளோம். திராவிடர் கழக மாநாடுகள் நூறு நடத்துவதும் சரி.. எம்.ஆர்.ராதா நாடகம் ஒன்னு நடத்துறதும் சரி" என்று பாராட்டிப் பேசிவிட்டு அமர்ந்தார். ராதாவுக்கு மகிழ்ச்சி. நாடகத்தை முழுதாகப் பார்த்து விட்டே அவர்கள் கிளம்பினார்கள்.
-அம்ரா பாண்டியன்