search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா!
    X

    செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா!

    • டி.எம்.எஸ், சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன் இத்தகைய வரிசையில் இணைத்து சிந்திக்க வைக்கும் குரல்வளம் மலேசியாவுக்கு.
    • ஆனாலும் கிராமத்தின் சுத்தமான காற்றும், பொங்கிவரும் நதியின் உற்சாகமும், தென்மேற்குப் பருவக்காற்றின் குளிர்ச்சியும் கொண்டு தனித்த வகைமையுடைய பாடல்கள் மலேசியா வாசுதேவனுடையது.

    இன்டர்வெல் நேரம். வகுப்பறையிலிருந்து பிள்ளைகள் வெளியேறியிருந்தனர். எனக்குள்ளிருந்த எட்டாம் வகுப்பு மாணவன் வெளியே வந்தான். செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா! பாடினான். 'சார் நீங்க பாடுவீங்களா?' வியப்பாக கேட்டாள் என் மாணவி நிவேதா. 'ஏய் நீ எப்போ வந்த?' 'நீங்க ஆரம்பித்தபோதே வந்துட்டேன்' சிரித்தாள். எனக்கு வெட்கம் வந்தது.

    நான் தனிமையின் பாடகன். எஸ்பிபி, ஜேசுதாஸ், மலேசியா யாரும் இல்லாதபோது நானே பாடி, நானே கேட்பேன். என்னால் மட்டுமே கேட்க முடிபவைதான் என் பாடல்கள்.

    ஒரு பாடகனாக வேண்டும் எனும் என் கனவு கடைசிவரை பலிக்கவே இல்லை.

    அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.

    பள்ளிக்கூடம் விட்டுவந்த ஒரு நாள் மாலை. இன்று சினிமாவுக்கு போகிறோம் என்றாள் அம்மா. அண்ணன்கள் மாட்டு வண்டியை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

    ஸ்ரீமுஷ்ணம் லஷ்மி டாக்கீஸில் படம் பார்க்கப்போவது கொண்டாட்டம். அன்றைய படம் எனக்கு புது அனுபவமாக இருந்தது. கோட் சூட் போட்ட எம்ஜியார் இல்லை. நம்பியார் இல்லை. துப்பாக்கி இல்லை. வாள் சண்டை இல்லை. பிழியப் பிழிய அழும் சிவாஜி இல்லை. 'பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து, கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி' அலங்காரத் தமிழ் இல்லை.

    ஏதோ எங்கள் தெருவில் நடக்கும் கதைபோலவே இருந்தது. மயிலுக்கு எங்கள் அஞ்சலைகள் சாடை. பதினாறு வயதினிலே. என் சினிமா ரசனையை கலைத்துப் போட்ட படம். அதில்தான் 'செவ்வந்தி பூமுடிச்ச சின்னக்கா'வை கேட்டேன்.

    கொல்லைக்கு போகும்போது, குருவி விரட்டும்போது, நடவு கட்டு கலைக்கும்போது, ராத்திரியில் மோட்டார் கொட்டகைக்கு தண்ணீர் பாய்ச்சப் போகும்போது எல்லாம் செவ்வந்திப் பூமுடிச்ச சின்னக்காதான்.

    எங்கள் பதின் பருவத்தை நிரப்பிய அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் மலேசியா வாசுதேவன். என்பதையெல்லாம் +2 வில்தான் புரிந்து கொள்ள முடிந்தது.

    அப்போது சினிமா கொட்டகைகளுக்கு முன் பாட்டு புத்தகம் விற்பார்கள். நாலணா இருக்கும். அதில் பாடல் வரிகளுக்கு முன்பு ஆண் குரல், பெண் குரல் என்றிருக்கும்.

    ஜேசுதாசுக்கு கந்தர்வக் குரல். எஸ்பிபி குரலில் நிறைய பெண்மையின் சாயல். தமிழ் சினிமாவில் எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் இரண்டு ஆண் குரல்கள். ஒன்று டிஎம்எஸ் உடையது. மற்றொன்று மலேசியாவுடையது.

    மலேசியா மலையாளி. ஆனாலும் தமிழில்தான் அதிகம் பாடினார். பிறமொழிகளில் பாடியது வெகு சொற்பம். இதிலும் டிஎம்எஸ்ஸோடு பொருந்துகிறார்.

    டி.எம்.எஸ், சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன் இத்தகைய வரிசையில் இணைத்து சிந்திக்க வைக்கும் குரல்வளம் மலேசியாவுக்கு. ஆனாலும் கிராமத்தின் சுத்தமான காற்றும், பொங்கிவரும் நதியின் உற்சாகமும், தென்மேற்குப் பருவக்காற்றின் குளிர்ச்சியும் கொண்டு தனித்த வகைமையுடைய பாடல்கள் மலேசியா வாசுதேவனுடையது.

    வெத்தல வெத்தலயோ, பொதுவாக எம்மனசு தங்கம், ஒத்த ரூபா ஒனக்குத் தாரேன், கண்ணத் தொறக்கணும் சாமி போன்ற பாடல்களை குத்துப்பாடல்கள் என்று சொல்ல மனம் வரவில்லை. துள்ளிசைப் பாடல்கள். கிராமத்து ரசனையில் பச்சக்கென்று அவை ஒட்டிக்கொண்டன.

    கிராமியம், நகைச்சுவை, நையாண்டி இவைதான் என்றில்லை. சோகத்துக்கும் அவர் குரல் அத்தனை பாந்தம். பட்டு வண்ண ரோசாவாம், பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன், பூங்காத்து திரும்புமா? போன்றவை சோகமும் தத்துவச் சாயலும் கொண்டவை. காலம் அழிக்க விரும்பாதவை.

    மேற்கத்திய இசைப் பின்னணி கொண்ட, கிளாசிக் வகைமையிலும் புகுந்து விளையாடினார். அடி ஆடு பூங்கொடியே,

    இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது, கோவில் மணி ஓசை தன்னில் போன்ற பாடல்கள் இளைஞர்களை கிறுக்குப்பிடிக்க வைத்திருந்தன.

    டிஎம்எஸ்ஸுக்குப் பிறகு சிவாஜியின் உதட்டில் கச்சிதமாக மலேசியாவால்தான் உட்கார முடிந்தது.. எம்ஜிஆருக்கு பாடவிரும்பினார். இளையராஜா இசையமைப்பதாக இருந்த படமொன்று கைவிடப்பட்டது.

    ரஜினியும் மலேசியா குரலும் செமர்த்தியாக சிங்க்கானது. தியேட்டர்கள் திருவிழாக்கொண்டாடின.

    இளையராஜாதான் மலேசியாவை உச்சத்தில் கொண்டு சேர்த்தார். கமர்ஷியலும் ஜீனியஸ் தன்மையையும் இணையப் பெற்றவர்கள் இருவரும்.. மலேசியா குரல் மட்டுமல்ல மனமும் இனிமையானது. கவிதைப் புத்தகமெல்லாம்கூட எழுதி வெளியிட்டார்.

    திரையிசைச் சூழல் மாறிய நேரம். மலேசியாவுக்கு சரியாக வாய்ப்புகள் அமையவில்லை. பாலு விக்கிற பத்தும்மா, உன் பாலு ரொம்ப சுத்தம்மா'வில் ஆரம்பித்தவர். விஷ்ணு விஷாலின் பலே பாண்டியாவில் கடைசியாக ஒரு பாடலை பாடினார்.

    கைவிடப்படும் துயரம் எல்லா கலைஞர்களையும் கவ்விக் கொள்கிறது. நமது ஞாபக அடுக்குகளில் ஒரு மர்ஃபி ரேடியோ இருக்கிறது. அது இருக்கும்வரை செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்காவும், மலேசியாவும் அழியப்போவதில்லை!

    - கரிகாலன்

    Next Story
    ×