என் மலர்
இந்தியா
உக்ரைனை எதிர்த்து ரஷிய ராணுவத்திற்காக சண்டையிடும் இந்தியர்களில் 12 பேர் பலி: மத்திய அரசு
- ரஷிய ராணுவத்தில் இணைந்து சண்டையிட்டவர்களில் 96 பேர் நாடு திரும்பிவிட்டனர்.
- 16 பேரை மாயமானவர்கள் என ரஷிய அதிகாரிகள் பட்டியலிட்டுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போர் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் முதலில் அதிவேகமாக ரஷியா உக்ரைன் பகுதிக்குள் முன்னேறியது. அதன்பின் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் செய்தன. இதனால் உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தியது.
இதனால் ரஷிய ராணுவம் பின்வாங்க தொடங்கியது. மேலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இழந்தது. இதனால் வெளிநாட்டில் உள்ள இளைஞர்களை அதிக சம்பளம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ராணுவத்தில் இணைத்தது.
அப்படி இந்தியாவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவரை ராணுவத்தில் சேர்த்து உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ஈடுபடுத்தியது ரஷியா. உக்ரைனுக்கு எதிரான சண்டையில் இந்தியாவைச் சேர்ந்த சிலர் உயிரிழந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் உக்ரைனுக்கு எதிராக ரஷியா ராணுவத்தில் சண்டையிட்ட இந்தியர்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-
ரஷிய ராணுவத்தில் பணிபுரியும் இந்தியவர்கள் குறித்து நாங்கள் சேகரித்த தகவலின்படி மொத்தம் 126 பேர் பணிபுரிந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதில் ஏற்கனவே 96 பேர் நாடு திரும்பிவிட்டனர். இவர்கள் ரஷியாவின் ராணுவ ஆயுதப்படையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இன்னும் 18 பேர் சண்டை களத்தில் உள்ளனர். இந்த 18 பேர்களில் 16 பேர் இருக்கும் இடம் தெரியவில்லை. ரஷிய அதிகாரிகள் அவர்களை மாயமானவர்கள் எனப் பட்டியலிட்டுள்ளனர். இதுவரை சண்டையில் 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரஷிய ராணுவத்தில் உள்ள இந்தியர்களை விடுவித்து, நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்காக ரஷிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.
இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வாரம் தொடக்கத்தில் கேரளாவைச் சேர்ந்தவர் ரஷிய ராணுவத்திற்கான சண்டையிட்டு உயிரிழந்ததாக வெளியான செய்திகளுக்குப் பின், வெளியுறவு அமைச்சகம் ரஷியாவிடம் இது தொடர்பாக கடுமையான வகையில் எடுத்துக்கூறியது.
கடந்த வருடம் ஜூலை மாதம் ரஷிய அதிபர் புதினை சந்தித்த இந்திய பிரதமர் மோடி, ரஷியா-உக்ரைன் சண்டையில் சிக்கியுள்ள இந்தியவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அக்டோபர் மாதம் கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின்போதும் புதினிடம் இது கருத்தை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.