என் மலர்
இந்தியா
புதிய அரசு பதவி ஏற்ற 49 நாளில் 14 பயங்கரவாத தாக்குதல்: பிரியங்கா காந்தி
- மத்தியில் புதிய அரசு அமையப்பட்ட பிறகு 14 பயங்கரவாத தாக்குதல்கள் கடந்த 49 நாட்களில் நடைபெற்றுள்ளன.
- இதில் 15 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். இது நாட்டுக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கடந்த நான்கு வாரங்களாக பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு படையினர் உள்ளூர் போலீசார் உடன் இணைந்து பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு வருகிறார்கள்.
இன்று ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்திலுள்ள கமாகரி செக்டாரில் பாகிஸ்தான் எல்லை அதிரடி குழு நடத்திய தாக்குதலில் இந்திய பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். 4 வீரர்கள் காயமடைந்துள்ளனர். பாதுகாப்புப்படை வீரர்களின் பதில் தாக்குதலில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
இந்த நிலையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு 49 நாட்களில் 14 பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளன. இதில் 15 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் ஒரு வீரர் வீர மரணம் அடைந்தார். நான்கு வீரர்கள் காயமடைந்தனர் என்ற செய்தி மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. அவர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும். அவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்.
மத்தியில் புதிய அரசு அமையப்பட்ட பிறகு 14 பயங்கரவாத தாக்குதல்கள் கடந்த 49 நாட்களில் நடைபெற்றுள்ளன. இதில் 15 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். இது நாட்டுக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.