என் மலர்
இந்தியா
17 பேர் மர்ம மரணம்- காஷ்மீரின் பதால் கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
- சுகாதாரம் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
- பதால் கிராமத்தை 3 மண்டலங்களாக பிரித்து இந்த தடை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ஜம்மு:
காஷ்மீரின் எல்லையோர மாவட்டமான ரஜோரியின் பதால் கிராமம் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. அந்த கிராமத்தை சேர்ந்த 3 குடும்பங்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறப்பு நிகழ்ந்து வருகிறது. கடந்த டிசம்பர் 7-ந்தேதி முதல் கடந்த 19-ந்தேதி வரை ஒருவர் பின் ஒருவராக 17 பேர் உயிரிழந்து விட்டனர்.
அவர்களின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களின் உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் நாட்டின் மிகப்பெரிய மருத்துவ ஆய்வு நிறுவனங்களுக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டன.
போலீஸ் உயர் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப்படையும் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எனினும் 17 பேரின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.
அங்கு சுகாதாரம் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். முதல்-மந்திரி உமர் அப்துல்லாவும் நேற்று முன்தினம் இந்த கிராமத்தை பார்வையிட்டார்.
இந்த நிலையில் பதால் கிராமத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த உத்தரவை மாவட்ட கூடுதல் கலெக்டர் ராஜீவ் குமார் கஜாரியா அறிவித்து உள்ளார்.
அதன்படி பதால் கிராமத்தை 3 மண்டலங்களாக பிரித்து இந்த தடை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிகழ்வுகள் நடத்தவோ, மக்கள் கூடுவதற்கோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொற்று பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
இதில் முக்கியமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வசித்து வந்த பகுதியில் அந்த குடும்ப உறுப்பினர்கள் உள்பட அனைத்து தனிநபர்களும் நுழைய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தடை செய்யப்பட்ட மண்டலங்களில் வசிக்கும் மக்கள் உண்ணும் உணவை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
குறிப்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் அதிகாரிகள் வழங்கும் உணவுப்பொருட்களை மட்டுமே உண்ண வேண்டும்.
இதற்காக அந்த வீடுகளில் உள்ள உணவு, சமையல் பொருட்கள் மற்றும் குடிநீர் உள்ளிட்டவற்றை உடனடியாக மாற்ற அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
இதற்கிடையே பதால் கிராமத்தை சேர்ந்த அய்ஜாஸ் அகமது (வயது 24) என்ற வாலிபர் திடீர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
17 பேர் மரணத்துக்கு விடை தெரியாததால் பதால் கிராமம் மட்டுமின்றி ஒட்டுமொத்த காஷ்மீரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.