என் மலர்
இந்தியா
இந்தியாவில் 4 வயது சிறுவனுக்கு அரிய வகை பறவைக் காய்ச்சல் - WHO சொல்வது என்ன?
- கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 2 வது பாதிப்பு பதிவாகியுள்ளது.
- சிறுவனின் வீட்டு சுற்றுப்புறத்தில் இருக்கும் கோழிப் பண்ணையில் இருந்து இந்த வைரஸ் தாக்கியுள்ளது என்று தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மேற்கு வங்கத்தில் H9N2 இன்புலுயென்சா வைரஸ் பறவைக் காய்ச்சல் 4 வயது சிறுவனை பாதித்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு [WHO] தெரிவித்துள்ளது. அரிதாக காணப்படும் இந்த வகை வைரஸ் இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 2 வது பாதிப்பு பதிவாகியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் கடந்த பிப்ரவரி மாதம் மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான காய்ச்சலால் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனுக்கு H9N2 வைரஸ் உறுதிசெய்யப்பட்டு கடந்த 3 மாதங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பிறகு சிறுவனின் உடல்நிலை தேறி வருகிறது.
சிறுவனின் வீட்டுச் சுற்றுப்புறத்தில் இருக்கும் கோழிப் பண்ணையில் இருந்து இந்த வைரஸ் தாக்கியுள்ளது என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது அல்ல என கூறப்படுகிறது. அரிதான இந்த H9N2 இன்புலுயென்சா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 2 வது முறையாக பதிவாகியுள்ளது மருத்துவம் மற்றும் சுகாதார நோக்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.