என் மலர்
இந்தியா

பெண்களுக்கு ரூ. 2500 வாக்குறுதி என்னாச்சு?- டெல்லி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-க்கள்

- டெல்லி தேர்தலின்போது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2500 ரூபாய் வழங்கப்படும் என பாஜக அறிவிப்பு.
- மார்ச் 8-ந்தேதிக்குள் பெண்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என மோடி உத்தரவாதம் அளித்திருந்தார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க. சார்பில் ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
தேர்தலுக்கான பிரசாரத்தின்போது டெல்லி பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும். மார்ச் 8-ந்தேதி அவர்களுடைய வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். அமைச்சரவையில் எடுக்கப்படும் முதல் முடிவு இதற்கானதாகத்தான் இருக்கும். இது மோடி உத்தரவாதம் என பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்திருந்தார்.
ஆனால் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்திற்கு முதல் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படுவதற்கான முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.-க்கள் அதிஷி தலைமையில் முதல்வர் ரேகா குப்தாவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு, 2500 ரூபாய் வழங்குவதாக தெரிவித்த வாக்குறுதி என்னாச்சு? என கோரிக்கை எழுப்பினர்.
இது தொடர்பாக அதிஷி கூறியதாவது:-
இரண்டு நாட்களுக்கு முன்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். ஆனால் எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. ஆகவே, சட்டமன்றத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கு வெளியே கூடினோம்.
முதல் அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் மோடி அளித்த 2500 ரூபாய் வாக்குறுதி பற்றி அவரிடம் கேட்டுக்கொள்ள விரும்பினோம். மோடியின் உத்தரவாதம் தவறு என நிரூபனமாகிக் கொண்டு வருகிறது.
முதல்வர் எங்களுக்கு எந்த உத்தரவாதமும் தரவில்லை. ஆனால், மார்ச் 8-ந்தேதிக்குள் வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார்.
இவ்வாறு அதிஷி தெரிவித்தார்.
இன்று முதல்வர் ரேகா குப்தா சட்டமன்றத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பின் 6 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். பின்னர் மீதமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.-வாக பதவி ஏற்றனர். எம்.எல்.ஏ.-க்கள் ஆங்கிலம், இந்தியா, சமஸ்கிருதம், உருது, மைதிலி, பஞ்சாபி என ஆறு மொழிகளில் பதவி ஏற்றுக்கொண்டனர்.