என் மலர்
இந்தியா
தமிழகத்தை தொடர்ந்து யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக கேரளா தீர்மானம் நிறைவேற்றியது
- யுஜிசி புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சமீபத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
அதில் துணை வேந்தர்களை நியமனம் செய்ய கவர்னருக்கே அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து யுஜிசி புதிய வரைவு விதிகளை திரும்ப பெறுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், கற்றல் முறை தொடர்பான எஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கடிதத்தில் வலியுறுத்தினார்.
யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கடிதத்துடன் இணைத்து அனுப்பியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு சமீபத்தில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதைப் போன்று, டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா மாநில சட்டமன்றங்களிலும் நிறைவேற்றிட வேண்டுமென்று கோரி அம்மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
தமிழக முதல்வர் கடிதம் எழுதியதை தொடர்ந்து, இன்று கேரளா சட்டமன்றத்தில் யுஜிசி புதிய வரைவு விதிகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அப்போது சட்டமன்றத்தில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், "நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் அந்தந்த மாநில சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு இணங்க செயல்படுகின்றன,. மாநில அரசுகளிடம் முறையான ஆலோசனையின்றி மத்திய விதிமுறைகளைத் திணிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்குக் குந்தகம் விளைவிக்கும்" என்று தெரிவித்தார்.