என் மலர்
இந்தியா

வீல் சேர் தர மறுத்த ஏர் இந்தியா.. நடந்து சென்ற மூதாட்டி கீழே விழுந்து படுகாயம்.. ஐசியுவில் அனுமதி

- பாட்டியை விமானக் கதவு வரை அழைத்துச்செல்ல ஏற்கனவே சக்கர நாற்காலி கோரியிருந்தனர்.
- அங்கு அவரது மூக்கு மற்றும் உதடுகளில் இரண்டு தையல்கள் போடப்பட்டன.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 82 வயது மூதாட்டி ஒருவருக்கு ஏர் இந்தியா நிறுவனம் சக்கர நாற்காளி கொடுக்க தாமதித்ததால் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
மறைந்த லெப்டினென்ட் ஜெனெரல் ஒருவரின் மனைவியான ராஜ் பாஸ்ரிச்சா (82 வயது), கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) தனது பேத்தி பருல் கன்வருடன் டெல்லியிலிருந்து பெங்களூருக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் மேற்கொள்ள இருந்தார்.
பேத்தி, பாட்டியை விமானக் கதவு வரை அழைத்துச்செல்ல ஏற்கனவே சக்கர நாற்காலி கோரியிருந்தனர். அது டிக்கெட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் அவர்கள் டெர்மினல்-3 ஐ அடைந்தபோது, அங்கு சக்கர நாற்காலி இல்லை. ஏர் இந்தியா ஊழியர்கள் மற்றும் விமான நிலைய உதவி மையத்திடம் பேத்தி முறையிட்டார். இருப்பினும் ஒரு மணி நேரம் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும், யாரும் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டுகிறார்.
சக்கர நாற்காலி கிடைக்காததால் மூதாட்டி தனது பேத்தியின் உதவியுடன் மெதுவாக நடக்கத் தொடங்கினார். ஆனால் நீண்ட தூரம் நடந்ததால் மூதாட்டியின் கால்கள் தளர்ந்து, இறுதியில் ஏர் இந்தியா பிரீமியம் எகானமி கவுண்டருக்கு முன்னால் அவர் சரிந்து விழுந்தார்.
விழுந்த பிறகு, அவரது தலை, மூக்கு மற்றும் உதடுகளிலிருந்து இரத்தம் வழியத் தொடங்கியது. ஆனால் விமான ஊழியர்களில் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. பின் தாமதாக சக்கர நாற்காலியை ஊழியர்கள் வழங்கியுள்ளனர்.
ஆனால் எந்த மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படவில்லை. அவருக்கு பலத்த காயங்கள் இருந்தபோதிலும் அவர் விமானத்தில் ஏற்றப்பட்டார். விமானப் பயணத்தின் போது, விமானக் ஊழியர்கள் ஒரு ஐஸ் கட்டியைக் கொடுத்து முதலுதவி அளித்தனர்.
விமானம் தரையிறங்கியதும் பெங்களூரு விமான நிலையத்தில் ஒரு மருத்துவர் அழைக்கப்பட்டார். அங்கு அவரது மூக்கு மற்றும் உதடுகளில் இரண்டு தையல்கள் போடப்பட்டன. ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது, இப்போது அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மூதாட்டியின் பேத்தி பருல் கன்வர் சமூக ஊடகங்களில் பதிவிட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) மூதாட்டியின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள பதிவில், "இந்த சம்பவத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். நாங்கள் இந்த விஷயத்தை முழுமையாக விசாரித்து வருகிறோம். விரைவில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளது.