என் மலர்
இந்தியா
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப ஒப்புதல்.. வாக்கெடுப்பில் முடிவு
- ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைத்தது.
- தெலுங்கு தேசம் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மக்களவை தேர்தலுடன் அனைத்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தி முடித்திட மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை முன்மொழிந்தது.
மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தச் சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்த குழு ஒரு நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை இன்று [டிசம்பர் 17] மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப பரிந்துரை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். கூட்டுக்குழு பரிசீலனையின் போது அனைத்துக் கட்சிகளும் விரிவாக கருத்து கூறலாம் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில், கூட்டுகுழுவுக்கு அனுப்ப ஆதரவாக 269 எம்.பி.க்களும், எதிராக 198 எம்.பி.க்களும் வாக்களித்தனர். எனவே பெரும்பான்மை வாக்குப்படி மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப முடிவானது. மேலும் மக்களவை மதியம் 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.