என் மலர்
இந்தியா
அதிகாலை 2 மணிக்கு கடைசி வாக்கு: ஆந்திராவில் இதுவரை இல்லாத அளவிற்கு 81.86 சதவீத வாக்குப்பதிவு
- 2014-ம் ஆண்டில் 78.41 சதவீத வாக்குகளும், 2019-ல் 79.77 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.
- 5,600 வாக்கு மையங்களில் 1200-க்கும் மேற்பட்ட வாக்களார்கள் 6 மணியை தாண்டிய நிலையிலும் டோக்கன் பெற்று வாக்களித்தனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று ஒரே கட்டமாக 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தோராயமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் 81.86 சதவீத வாக்குகள் பதிவானதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா தெரிவித்துள்ளார்.
EVMs மூலமாக 80.66 சதவீத வாக்குகளும், தபால் வாக்குகள் மூலம் 1.2 சதவீத வாக்குகளும் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி மீனா தெரிவித்துள்ளார்.
வாக்களிக்க 4.13 கோடி பேர் தகுதியானவர்கள் என்ற நிலையில், 3.33 கோடி பேர் (3,33,40,560) 25 மக்களவை இடங்களுக்கும், 3,33,40,333 பேர் 175 சட்டமனற இடங்களுக்கும் வாக்களித்துள்ளனர்.
நான்காவது கட்டமாக நடைபெற்ற தேர்தலில் நட்டிலேயே அதிகமாக ஆந்திராவில்தான் அதிக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான வாக்குப்பதிவு இதுவாகும் என மீனா தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டில் 78.41 சதவீத வாக்குகளும், 2019-ல் 79.77 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலமாக (ஆந்திரா + தெலுங்கானா) இருந்தபோது கூட இவ்வளவு அதிகமாக வாக்குகள் பதிவாகவில்லை.
மக்கள் வாக்களிக்க ஆர்வம் கட்டினர். வெளிநாட்டில் வசிக்கும் பெரும்பாலானோர் தாயகம் திரும்பி தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் என அதிகாரி தெரிவித்தார். காலை நேரத்தில் வாக்கு சதவீதம் குறைவாக இருந்தது. 4 மணிக்குப் பிறகு அதிக அளவிலான மக்கள் திரணடு வந்து வாக்களித்தனர்.
5,600 வாக்கு மையங்களில் 1200-க்கும் மேற்பட்ட வாக்களார்கள் 6 மணியை தாண்டிய நிலையிலும் டோக்கன் பெற்று வாக்களித்தனர். 3,500 வாக்கு மையங்களில் நேரம் நீட்டிக்கப்பட்டது. ஒரு மையத்தில் கடைசி வாக்கு புதன்கிழமை (இன்று) அதிகாலை 2 மணிக்கு பதிவானது.
33 இடங்களில் 350 அறைகளில் வாக்கு எந்திரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதுவரை மறு வாக்குப்பதிவு தொடர்பாக பரிந்துரை வரவில்லை. ஜூன் 4-ந்தேதி முடிவு அறிவிக்கப்பட இருக்கிறது.