என் மலர்
இந்தியா
"ஆபரேஷன் தாமரை" குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கொடுக்கவும்: கெஜ்ரிவாலுக்கு ஊழல் தடுப்பு பிரிவு நோட்டீஸ்
- 15 கோடி ரூபாய், மந்திரி பதவி வழங்குவதாக ஆம் ஆத்மி வேட்பாளர்களை பாஜக அணுகியதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.
- கெஜ்ரிவால் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் உத்தரவு.
டெல்லி மாநில சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 60.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் 16 ஆம் ஆத்மி வேட்பாளர்களை (தற்போது எம்.எல்.ஏ.-க்கள்) பாஜக தொடர்பு கொண்டு, 15 கோடி ரூபாய் தருகிறோம். அத்துடன் மந்திரி பதவியும் வழங்குவதாக பாஜக-வினர் கூறியதாக கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், "55 தொகுதிகளுக்கு மேல் பாஜக கைப்பற்றும் என கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஏன் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்க முயற்சிக்க வேண்டும். ஆம் ஆத்மி வேட்பாளர்களை உடைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கான சதிதான் இந்த போலி கருத்து கணிப்பு. ஆனால் எங்களுடைய வேட்பாளர்கள் ஒருவர் கூட கட்சி தாவமாட்டார்கள்" என கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
கெஜ்ரிவால் குற்றச்சாட்டு டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த குற்றச்சாட்டு விசாரணைக்கு தகுதியானது எனத் தெரிவித்த துணை நிலை ஆளுநர் சக்சேனா, இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு (Anti-Corruption Bureau) அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்காக கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர்கள் கெஜ்ரிவால் வீட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை.
கெஜ்ரிவால் வழக்கறிஞர் "ஏசிபி-க்கு நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரமும் இல்லை. அவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. இவை அனைத்தும் ஒரு அரசியல் நாடகத்தை உருவாக்க பாஜக செய்யும் சதி" என்றார்.
இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு ஊழல் தடுப்பு பிரிவு (ஏசிபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீசில் "பாஜக அணுகியதாக கூறப்படும் 16 எம்.எல்.ஏ.-க்களின் பெயரை தாக்கல் செய்ய வேண்டும். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-க்களை தொடர்பு கொண்டவர்கள் போன் நம்பர்கள், மற்ற விவரங்களையும் அளிக்க வேண்டும்.
பல்வேறு ஊடகங்கள்/சமூக ஊடக தளங்களில் நீங்களும் உங்கள் கட்சி உறுப்பினர்களும் கூறிய லஞ்ச குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆதாரங்கள் மற்றும் ஆதாரங்களை முன்வைக்கவும்.
டெல்லி மக்களிடையே அச்சத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தக்கூடிய இத்தகைய தகவல்களை ஊடகங்கள்/சமூக ஊடக தளங்களில் பரப்பும் நபர்கள் மீது ஏன் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை தெளிவுபடுத்துங்கள்" குறிப்பிடப்பட்டுள்ளது.