search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தலை சீர்குலைத்து அதிகாரத்தை சர்வாதிகாரம் ஆக்க முயற்சி.. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்ப்பு
    X

    தேர்தலை சீர்குலைத்து அதிகாரத்தை சர்வாதிகாரம் ஆக்க முயற்சி.. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்ப்பு

    • 2 நாட்களுக்கு முன்பு இங்கு அரசியலைப்பு மரபின் புகழை பேசிவிட்டு இன்று அதில் மாற்றம் செய்கிறார்கள்
    • நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களை விடக் கற்றறிந்தவர்கள் யாரும் இல்லை

    இந்தியாவில் மக்களவை தேர்தலுடன் அனைத்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தி முடித்திட மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

    முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வழங்கிய அறிக்கையில் அடிப்படையில் ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    தொடர்ந்து இன்று இன்று [டிசம்பர் 17] ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் உரையாற்றி வருகின்றனர்.

    அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி பேசுகையில், அரசியலமைப்பில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக கொண்டுவரப்படும் இந்த 129 வது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா 2024 ஆகியவற்றை நான் எதிர்க்கிறேன்.

    அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையைத் தாண்டி அடிப்படையாக கட்டமைக்கப்பட்ட ஒரு கோட்பாடு உள்ளன. அந்த அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு இந்திய அரசியலமைப்பின் சில அம்சங்கள் இந்த அவையின் திருத்த அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை வலியுறுத்துகிறது.

    அந்த அத்தியாவசிய அம்சங்களில் ஒன்று,கூட்டாட்சி மற்றும் நமது ஜனநாயகத்தின் கட்டமைப்பு. எனவே சட்டத்துறை அமைச்சரால் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாக்கள் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை முற்றிலும் தாக்குகின்றன.

    மேலும் அவை இந்த அவையின் அதிகாரத் திறனுக்கு அப்பாற்பட்டவை, எனவே இந்த மசோதாக்களை அறிமுகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

    இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி எம்.பி. தர்மேந்திர யாதவ் பேசுகையில்,

    அரசியலமைப்பில் கொண்டுவரப்படும் இந்த 129 வது சட்டதிருத்தத்துக்கு எதிராக நான் நிற்கிறேன். 2 நாட்களுக்கு முன்பு இங்கு அரசியலைப்பு மரபின் புகழை பேசிவிட்டு இன்று அதில் மாற்றம் செய்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    இந்த திருத்த மசோதா அரசியலமைப்பின் அடிப்படை உணர்வையும் அடிப்படைக் கட்டமைப்பையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

    நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களை விடக் கற்றறிந்தவர்கள் யாரும் இல்லை என்று கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை, இந்த அவையில் கூட [மாற்றம் செய்யும் அளவுக்கு] அவர்களை விட கற்றறிந்தவர்கள் யாரும் இல்லை, இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்று பேசினார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அகிலேஷ் யாதவ், "ஜனநாயக சூழலில், 'ஒருவர்' என்ற வார்த்தையே ஜனநாயகமற்றது. ஜனநாயகம் பன்மைத்துவத்தை ஆதரிக்கிறது.

    'ஒருவர்' என்ற உணர்வில் மற்றவர்களுக்கு இடமில்லை. இது சமூக சகிப்புத்தன்மையை மீறுகிறது. தனிநபர் மட்டத்தில் 'ஒருவர்' என்ற உணர்வு ஈகோவை பிறப்பிக்கிறது. அதிகாரத்தை சர்வாதிகாரமாக மாற்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    சிவசேனா கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி இதுகுறித்து பேசுகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மீண்டும் அதிகாரத்தை மையப்படுத்தும் போர்வையில் கொண்டு வரப்படுகிறது.

    இந்த முறையில் அரசியலமைப்பைத் தாக்குவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தேர்தல் செயல்முறையை சீர்குலைப்பது, கூட்டாட்சிக்கு எதிராக செயல்படுவது அதிகாரத்தை மையப்படுத்துவதற்கான மத்திய அரசின் ஒரு வழியாகும் என்று கூறினார்.

    Next Story
    ×