search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பயணிகளின் கவனத்துக்கு... மத்திய பட்ஜெட்டில் தடம் புரண்ட ரெயில்வே துறை!
    X

    பயணிகளின் கவனத்துக்கு... மத்திய பட்ஜெட்டில் தடம் புரண்ட ரெயில்வே துறை!

    • 2017 ஆம் ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டோடு மத்திய பாஜக அரசு இணத்தது.
    • கடந்த பட்ஜெட்டில், ரயில்வே துறைக்கு ரூ. 2,55,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

    அப்போது முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவித்தார். சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் பீகார் மாநிலத்துக்கு புதிய விமான நிலையங்கள் உட்பட அதிகபட்சமாக 7 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

    ஆனால் ரெயில்வே துறை குறித்த எந்த சிறப்பு திட்டங்களையும் அவர் அறிவிக்கவில்லை. ரெயில் உள்கட்டமைப்புகள் மேம்பாடு, விபத்துகளை தவிர்ப்பதற்கான கட்டமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்த எதிர்பார்ப்பு பட்ஜெட்டுக்கு முன் எழுந்தது.

    உலகின் நான்காவது பெரிய ரெயில்வே கட்டமைப்பை கொண்டது இந்தியா. நாளொன்றுக்கு சுமார் 13,000 பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 2.4 கோடி பேர் தினமும் இவற்றில் பயணிக்கின்றனர். 12 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ரெயில்வேயில் பணியாற்றி வருகின்றனர்.

    இதில் ஆண்டுதோறும் 50,000 பேர் பணி ஓய்வு பெறுவதால் சுமார் 1.72 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. ஆள் பற்றாக்குறையால் தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளிட்ட காரணங்களால் அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயமும் அதிகரித்து வருகிறது.

    ரெயில்வே தொழிற்சங்கத்தினர் கூற்றுப்படி, நாடு முழுவதும் 10,000 நீளத்திற்கான தண்டவாளங்கள் உடனடியாக பராமரிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.

    ஆனால் ஒரே ஒரு இடத்தில் கூட ரெயில்வே என்ற வார்த்தை பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. கடந்த காலங்களில் ரெயில்வே துறைக்கு தனி பட்ஜெட் அமைப்பு இருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டோடு மத்திய பாஜக அரசு இணத்தது.

    இது நாட்டில் பெரும்பகுதியினர் பயன்படுத்தும் ரெயில்வே துறையின் முக்கியத்துவத்தைக் குறைத்தது. இந்நிலையில் தற்போதைய பொது பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கு முக்கியத்துவம் அளிக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

    கடந்த பட்ஜெட்டில், ரயில்வே துறைக்கு ரூ. 2,55,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இது 2023-24ல் இருந்த ரூ.2,40,200 கோடியிலிருந்து 5% அதிகமாகும். ஆனால் இந்த வருட பட்ஜெட்டில் எந்த உயர்வும் இன்றி தோராயமாக அதே ரூ. 2.55 லட்சம் கோடி என்ற அதே நிதி வரம்பிலேயே தேக்கமடைந்துள்ளது.

    Next Story
    ×