என் மலர்
இந்தியா
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா?: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில் சிபிஐ கைது செய்தது.
- கடந்த ஆறு மாதம் சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலுக்கு இன்று ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்ப்பு.
டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இதன் அடிப்படையில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, தெலுங்கானா எம்.எல்.சி. கவிதா உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் மக்களவை தேர்தல் பிரசாரத்துக்காக உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் கொடுத்தது. பின்னர் கடந்த ஜூன் அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது.
சிறையில் இருந்து கெஜ்ரிவால் விடுதலையாகும் நிலையில் திடீரென சி.பி.ஐ. அவரை கைது செய்தது. இந்த சூழலில் தனது கைதுக்கு எதிராகவும், ஜாமீன் கேட்டும் அவர் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி சூர்யா கந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த விசாரணை கடந்த 5-ந்தேதி முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என உச்சநீதிமன்ற இணையதளத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய தீர்ப்பில் ஜாமீன் வழங்கப்பட்டால் சுமார் ஆறு மாதங்கள் கழித்து சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வருவார்.