என் மலர்
இந்தியா
பரம்வீர் சக்ரா உள்ளிட்ட விருதுகளுக்கான பரிசுத்தொகை அதிகரிப்பு: பீகார் அரசு
- இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்று பரம்வீர் சக்ரா.
- போர்க்காலத்தில் சிறந்த வீரத்தை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
பாட்னா:
ராணுவத்தில் வழங்கப்படும் மிக உயரிய விருது பரம்வீர் சக்ரா ஆகும். போர்க்காலங்களில் மிகவும் துணிச்சலுடன் செயல்படும் முப்படையினரின் வீரத்தைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.
கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி இந்த விருது தோற்றுவிக்கப்பட்டது. முதலாவதாக ராணுவ மேஜர் சோம்நாத் சர்மா பரம்வீர் சக்ரா விருதை பெற்றார். இதுவரை 21 பேர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். அவர்களில் 14 பேருக்கு மரணத்துக்கு பிந்தைய விருதாக இது வழங்கப்பட்டது.
இந்நிலையில், பீகார் அரசு பரம்வீர் சக்ரா விருது உள்பட பல்வேறு விருதுகளுக்கு வழங்கப்பட்டு வரும் பரிசுத்தொகையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, பரம்வீர் சக்ரா விருது பெறுபவர்களுக்கு ஒருமுறை செலுத்தும் ரூ.10 லட்சமானது ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
அசோக சக்ரா விருதுக்கான பரிசுத்தொகை 8 லட்சத்தில் இருந்து 75 லட்சமாகவும், மகாவீர் சக்ரா விருதுக்கு 5 லட்சத்தில் இருந்து 50 லட்சமாகவும், கீர்த்தி சக்ரா விருதுக்கு 4 லட்சத்தில் இருந்து 10 லட்சமாகவும், வீர் சக்ரா விருதுக்கு 2 லட்சத்தில் இருந்து 9 லட்சமாகவும், சவுர்ய சக்ரா விருது 1.5 லட்சத்தில் இருந்து 8 லட்சமாகவும் உயர்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.