search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கெஜ்ரிவாலை கொலை செய்ய பயிற்சி பெற்ற குண்டர்களை அனுப்பிய பாஜக - அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு
    X

    கெஜ்ரிவாலை கொலை செய்ய பயிற்சி பெற்ற குண்டர்களை அனுப்பிய பாஜக - அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு

    • தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பேரின் பெயரை அதிஷி குறிப்பிட்டார்.
    • மூன்று பேரும் பாஜகவின் பயிற்சி பெற்ற குண்டர்கள் மற்றும் குற்றவாளிகள் என்று தெரிவித்தார்.

    ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக முயற்சிப்பதாக டெல்லி முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.

    வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லிக்கு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று பிரசாரத்திற்கு சென்ற கெஜ்ரிவாலின் கார் மீது கம்பு மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    தாக்குதல் வீடியோவை பகிர்ந்த ஆம் ஆத்மி, கெஜ்ரிவாலை எதிர்த்து புது டெல்லி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரவேஷ் வர்மாவின் குண்டர்கள் செங்கல் மற்றும் கற்களால் தாக்கியதாகவும், அதனால் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்ய முடியாதபடி காயப்படுத்த முயன்றதாகவும் குற்றம் சாட்டியது.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அதிஷி, அவர்கள் வீசிய கற்கள் மேலே விழுந்திருந்தால் அவர் மரணித்திருப்பார்

    தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பர்வேஷ் வர்மாவுடன் தொடர்புடைய மூன்று பேரின் பெயரை அதிஷி குறிப்பிட்டார். அரவிந்த் கெஜ்ரிவாலைக் கொல்ல பயிற்சி பெற்ற தேர்ந்த குற்றவாளிகள் மற்றும் குண்டர்கள் பாஜகவால் அனுப்பப்பட்டனர் என்பது தெளிவாகிறது என்று கூறினார்.

    கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல் நடத்திய மூவர் ராகுல், ரோகித், சுமித் ஆகியோர் ஆவர். ராகுல் எப்போதும் பாஜக வேட்பாளர் பிரவேஷ் வர்மாவுடன் காணப்படுகிறார் மற்றும் அவரது பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுள்ளார். ராகுல் மீது 7 ஆண்டு சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் திருட்டு முயற்சி வழக்குகள் உள்ளன.

    ரோகித்தும் பிரவேஷ் வர்மாவுடன் தொடர்ந்து தங்கி, அவரின் பிரச்சாரத்தில் வேலை செய்பவர். ரோகித் மீது 2011 இல் ஒரு திருட்டு வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்ளது.

    கெஜ்ரிவாவின் கார் மீது கற்கள் வீசப்பட்டபோது அங்கிருந்த மூன்றாவது நபர் சுமித். அவர் மீதும் திருட்டு, கொள்ளை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

    மூன்று பேரும் பாஜகவின் பயிற்சி பெற்ற குண்டர்கள் மற்றும் குற்றவாளிகள். எனவே தேர்தல் தோல்வி பீதியில், பாஜக இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலைக் கொல்ல முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது என்று அதிஷி குற்றம் சாட்டினார்.

    Next Story
    ×