என் மலர்
இந்தியா
மக்களவை தேர்தலுக்கு ரூ.1,700 கோடி செலவிட்ட பாஜக.. விளம்பரத்துக்கு மட்டுமே இவ்வளவா?
- ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைந்தது.
- நட்சத்திரப் பிரச்சாரகர்களின் பயணச் செலவுக்கு ரூ.168.92 கோடி.
கடந்த வருடம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்காக பாஜக, 1,737.68 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது என தேர்தல் ஆணையத்தின் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் 18வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. பின்னர், தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக-வுக்கு 240 இடங்கள் கிடைத்தது. ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைந்தது.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, அரசியல் கட்சிகள் தேர்தல் முடிந்த 90 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் செலவு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.
இதன்படி அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் செலவு அறிக்கைகளை 4.9.2024 க்குள் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் பாஜக கடைசி தேதி கடந்தும் இன்னும் அறிக்கை சமர்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பின் தற்போது பாஜக சமர்ப்பித்துள்ள தேர்தல் செலவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி பாஜகவின் கடந்த மக்களவை தேர்தலுக்கான செலவு ரூ. 1,737.68 கோடி.
இதில் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் விளம்பரங்கள், எஸ்எம்எஸ் பிரச்சாரங்கள் மற்றும் கேபிள், இணையதளங்கள் மற்றும் டிவி சேனல்களில் விளம்பரங்கள் உள்ளிட்ட ஊடக விளம்பரங்களுக்காக சுமார் ரூ.611.50 கோடியை பாஜக செலவிட்டுள்ளது.
சுவரொட்டிகள், பதாகைகள், விளம்பரங்கள் மற்றும் கொடிகள் போன்ற விளம்பரப் பொருட்களுக்காக 55.75 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் பேரணிகளுக்கு மேடைகள், ஆடியோ அமைப்புகள், பேரிகார்டுகள் மற்றும் வாகனங்களுக்கான ஏற்பாடுகளுக்கு 19.84 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
நட்சத்திரப் பிரச்சாரகர்களின் பயணச் செலவுக்கு ரூ.168.92 கோடியும், மற்ற கட்சித் தலைவர்களின் பயணத்துக்கு ரூ.2.53 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.