என் மலர்
இந்தியா

தேர்தலுக்கு பின்னரும் பீகாரில் நிதிஷ் குமார்தான் என்.டி.ஏ. தலைவர்: துணை முதல்வர் திட்டவட்டம்

- நிதிஷ் குமார் என்.டி.ஏ. தலைவராக நேற்றும் இருந்தார். இன்றும் இருக்கிறார். நாளையும் இருப்பார்.
- தேஜஸ்வி யாதவ் அவருடைய தந்தை லாலு பிரசாரத் யாதவால் நியமனம் செய்யப்பட்டவர் மட்டுமே.
பீகார் மாநிலத்தில் இந்த வருட இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் போட்டியிடும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜேடியு) தலைவர்களும், பாஜக தலைவர்களும் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
ஆனால் சட்டமன்ற தேர்தலுக்குப் பின், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) புதுமுகத்தை முன்னிறுத்தும் என பீகார் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதோடு நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் (வயது 47) அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பாஜக தலைவரும், பீகார் மாநில துணை முதல்வருமான சம்ரத் சவுத்ரி, நிதிஷ் குமார்தான் அடுத்த முறையும் முதல்வராக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சம்ரத் சவுத்ரி கூறியதாவது:-
1996-ல் இருந்து பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியை வழி நடத்தி வரும் நிதிஷ் குமாருடன் பாஜக உள்ளது. ஆகவே, நிதிஷ் குமார் நேற்றும் தலைவராக இருந்தார். இன்றும் தலைவராக இருக்கிறார். நாளையும் தலைவராக இருப்பார்.
நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் (வயது 47) அரசியலுக்கு வருவது நிதிஷ் குமாரின் தனிப்பட்ட முடிவு. இது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உள்கட்சி விவகாரம். அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் பாஜக அவர்களுடன் நிற்கும்.
தேஜஸ்வி யாதவ் அவருடைய தந்தை லாலு பிரசாரத் யாதவால் நியமனம் செய்யப்பட்டவர் மட்டுமே. ஒருநாள் நாள் லாலு பிரசாத் யாதவ் தேஜ் பிரசாத் யாதவ் அல்லது மிசா பாரதி என்னுடைய அரசியல் வாரிசு என அறிவிக்கும்போது, தேஜஸ்வியை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள்.
இவ்வாறு சம்ரத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.