என் மலர்
இந்தியா
அரவிந்த் கெஜ்ரிவால் "விளம்பரத்தின் முன்னோடி": பாஜக கிண்டல்
- பிசினஸ் பிளாஸ்டர்ஸ் திட்டத்திற்காக டெல்லி மாநில அரசு மொத்தமாக 54 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
- எனினும், இந்த திட்டத்தின் விளம்பரத்திற்காக 80 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
டெல்லி மாநில சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் பாஜக-வுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையில் தற்போது தேர்தல் போர் தொடங்கிவிட்டது. பரஸ்பர குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மீது பாஜக கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது. அதிலும் முதல்வர் மாளிகை (Sheesh Mahal) மறுசீரமைப்புக்கு டெல்லி மக்களின் பணத்தை செலவிட்டதாக குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை விளம்பரத்தின் முன்னோடி என அழைக்க வேண்டும் என பாஜ.க. எம்.பி. சம்பித் பத்ரா கிண்டல் செய்துள்ளார்.
இது தொடர்பாக பா.ஜ.க. எம்.பி., சம்பித் பத்ரா கூறியதாவது:-
இன்று முதல் அரவிந்த் கெஜ்ரிவாலை விளம்பர முன்னோடி (Advertisement Baba) என அழைக்க வேண்டும். பிசினஸ் பிளாஸ்டர்ஸ் திட்டத்திற்காக டெல்லி மாநில அரசு மொத்தமாக 54 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. எனினும், இந்த திட்டத்தின் விளம்பரத்திற்காக 80 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான தொகையை விட 1.5 மடங்கு விளம்பரத்திற்கு செலவிடப்பட்டுள்ளதாக சிஏஜி தெரிவித்துள்ளது.
மற்றொரு திட்டத்திற்கு 1.9 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், விளம்பரத்திற்கான செலவு 27.9 கோடி ரூபாய் ஆகும்.
சிஏஜி அறிக்கையின்படி மார்ச் மாதம் 17-ந்தேதி டெல்லி அரசின் பொதுப்பணித்துறை அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசு வீட்டை புதுப்பித்து கட்ட பரிந்துரை கொடுத்துள்ளது. அதில் கட்டிடத்தை இடித்து மேலும் ஒரு மாடி கட்டுவதற்கு பரிந்துரைத்துள்ளது. ஆச்சர்யம் என்ன வென்றால் ஒரேநாளில் பொதுப்பணித்துறையின் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இவ்வாறு பத்ரா தெரிவித்துள்ளார்.
சிஏஜி அதிகாரி கிரிஸ் சந்த்ரா முர்மு, டெல்லி மாநில முதல்வர் வீடு ஷீஷ் மஹால் 33.66 கொடி ரூபாய்க்கு கட்டப்பட்டுள்ளது. 7.61 கோடி ரூபாய்க்கு மீண்டும் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், டெண்டர் 8.62 கோடி ரூபாய்க்கு விடப்பட்டது. திட்டமிட்டதை விட 13.21 சதவீதம் அதிகம். வேலை 2022-ல் முடிவடைந்தது. ஆனால் செலவு 33.66 கோடி ரூபாய். 342.31 சதவீதம் அதிக செலவு ஏற்பட்டுள்ளது. டெண்டர் செயல்முறை குறித்து சிஏஜி கேள்வி எழுப்பியிருந்தது.
இதைத்தான் பாஜக ஷீஷ் மஹால் முறைகேடு எனத் தெரிவித்து வருகிறது.