என் மலர்
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன மூவர் சடலமாக மீட்பு.. பயங்கரவாதிகளின் சதி என மத்திய அமைச்சர் ஆவேசம்

- போலீசார், ராணுவ வீரர்களுடன் சேர்ந்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- நீர்வீழ்ச்சியின் அருகே மூன்று பேரின் உடல்கள் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டம், மல்ஹார் அருகே கடந்த மார்ச் 5ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காணாமல் போனார்கள்.
வருண் சிங் (வயது 15), அவரது மாமா யோகேஷ் சிங் (வயது 32), தாய் மாமா தர்ஷன் சிங் (வயது 40) ஆகிய மூவரும் அவர்களின் இல்லத் திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற சிறிது நேரத்தில் காணாமல் போயினர். அன்றைய இரவு 8.30 மணியளவில் தர்ஷன் தனது வீட்டிற்கு கடைசியாக தொலைபேசியில் அழைத்து, வழி தவறிவிட்டதாகக் கூறியுள்ளார்.
இதுபற்றி குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரர்களுடன் சேர்ந்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
டிரோன் மூலம் நடந்த தேடுதல் வேட்டையில் கதுவாவின் பில்லாவர் தாலுகாவின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியின் அருகே மூன்று பேரின் உடல்கள் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டன.
அவற்றை மீட்டு அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்களில் எந்த காயங்களும் இல்லை என்றாலும் அவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் மூன்று பேரும் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இன்று இதுகுறித்து பேசிய அவர், இது மிகவும் கவலைக்குரிய விஷயம். இந்த அமைதியான பகுதியில் சூழலைக் கெடுப்பதற்குப் பின்னால் மிகப்பெரிய சதி இருப்பதாகத் தெரிகிறது.
இந்த விஷயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். நிலைமையை மதிப்பிடுவதற்காக மத்திய உள்துறைச் செயலாளரே ஜம்முவுக்குச் நேரடியாக செல்கிறார் என்று கூறினார். ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் இருந்து பாஜக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.