என் மலர்
இந்தியா

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு கவனம்: நிர்மலா சீதாராமன்

- கார்ப்பரேட் வரி தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.
- கார்ப்பரேட் வரியை குறைத்தது காங்கிரஸ் ஆட்சிதான்.
புதுடெல்லி :
நடப்பு நிதி ஆண்டில் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் கோடி கூடுதல் செலவினத்துக்கு ஒப்புதல் கோரி, மத்திய அரசு துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதற்கு மக்களவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது. மாநிலங்களவையில் நேற்று துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது:-
எரிபொருள் விலை, உரம் விலை போன்ற வெளியுலக காரணங்களால், பணவீக்கம் அதிகரிக்கிறது. இருப்பினும், மொத்தவிலை பணவீக்கம் கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
6 சதவீதத்துக்கு மேல் இருந்த சில்லரை விலை பணவீக்கம், கடந்த நவம்பர் மாதத்தில் 5.88 சதவீதமாக குறைந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை போன்ற கொள்கைகளால், தனியார் மூலதன செலவு அதிகரித்து வருகிறது.
வரிவசூலில் ஏற்பட்ட முன்னேற்றத்தால், துணை மானிய கோரிக்கையில் கோரப்பட்ட தொகையை திரட்ட முடியும். வங்கிகளின் மொத்த வாராக்கடன்கள், 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக 5.9 சதவீதமாக குறைந்துள்ளது.
கொரோனாவை எதிர்கொண்ட மத்திய அரசின் அணுகுமுறையால், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், துணை மானிய கோரிக்கைக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்து, மக்களவைக்கு திருப்பி அனுப்பியது. அதன்மூலம், இரு அவைகளின் ஒப்புதலை பெறும் நடைமுறை நிறைவடைந்தது.
நிர்மலா சீதாராமன் தனது பதில் உரையில், கார்ப்பரேட் வரி தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
1994-ம் ஆண்டு மன்மோகன்சிங் நிதி மந்திரியாக இருந்தபோது, கார்ப்பரேட் வரி 45 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைக்கப்பட்டது. பின்னர், 1997-ம் ஆண்டு, 35 சதவீதமாக குறைக்கப்பட்டது.
2000-ம் ஆண்டில் இருந்து உபரி வரி சேர்க்கப்பட்டதால், கார்ப்பரேட் வரி 36 முதல் 38 சதவீதம் வரை ஆனது. 2005-ம் ஆண்டு ப.சிதம்பரம் அதை 30 சதவீதமாக குறைத்தார். எனவே, கார்ப்பரேட் வரியை குறைத்தது காங்கிரஸ் ஆட்சிதான்.
இவ்வாறு அவர் கூறினார்.