என் மலர்
இந்தியா
டெல்லி முதல்வர் அதிஷி பொய் வழக்கில் கைது செய்யப்படலாம்- கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
- சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியை மட்டும் தான் டெல்லி மக்கள் பாஜகவிற்கு கொடுத்தார்கள்.
- ஆம் ஆத்மி தலைவர்களையும் அமைச்சர்களையும் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
தலைநகர் டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது அதற்கான பணிகளை தொடங்கிவிட்டார். மொத்தமுள்ள 70 தொகுகளுக்கும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், 18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் தலா 2,100 ரூபாய் வழங்கப்படும் என்றும் டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை எனவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பொய்யான வழக்கில் டெல்லி முதல்வர் அதிஷியை கைது செய்ய மத்திய புலனாய்வு அமைப்புக்கள் முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு நான் உட்பட பல மூத்த ஆம் ஆத்மி தலைவர்களையும் அவர்கள் கைது செய்தனர். தேர்தல் பிரசாரத்தில் இருந்து எங்களை திசை திருப்புவதற்கு தான் இதை எல்லாம் அவர்கள் செய்கிறார்கள்.
டெல்லி ஆம் ஆத்மி அரசின் பணிகளை துணை நிலை கவர்னர் மூலம் நிறுத்தி வைக்க முயற்சி செய்தனர். ஆனாலும் டெல்லி அரசு செயல்பட்டது. அதனால் ஆம் ஆத்மி தலைவர்களையும் அமைச்சர்களையும் சிறைக்கு அனுப்பி வைத்தனர். அப்போதும் ஆம் ஆத்மி அரசு செயல்பட்டது.
டெல்லியில் பாஜகவிற்கு கவர்னர் மற்றும் 7 எம்.பி.க்கள் மூலம் 'பாதி அரசு' உள்ளது. ஆனால் அவர்கள் சாலை வசதி, மருத்துவமனை, பள்ளிக்கூடம், கல்லூரி என எதையுமே உருவாக்கவில்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியை மட்டும் தான் டெல்லி மக்கள் பாஜகவிற்கு கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் அந்த வேலையை கூட ஒழுங்காக பார்க்கவில்லை. பாஜகவில் டெல்லி முதல்வருக்கான வேட்பாளர் கூட இல்லை" என்று தெரிவித்தார்.