என் மலர்
இந்தியா
மாநிலங்களவையில் மிகப்பெரிய இடையூறே தலைவர்தான்... நோட்டீஸ் கொடுக்க வேண்டிய கட்டாயம்- கார்கே
- மூன்று வருடங்களாக முக்கியமாக விசயங்கள் குறித்து பேச நேரமோ அல்லது இடமோ தரவில்லை.
- தலைவரே அரசாங்கத்தைப் பாதுகாக்கும்போது எதிர்க்கட்சிகளின் பேச்சைக் கேட்பது யார்?.
மாநிலங்களவையில் அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார் எனக் கூறிய எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் (பதவி நீக்கம்) கொண்டு வந்துள்ளன. காங்கிரஸ், திரணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த 70 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு தீர்மானத்தை வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஜெகதீப் தன்கர் மிகப்பெரிய இடையூறாக இருந்ததால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டதாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில் "மாநிலங்களவையில் மிகப்பெரிய இடையூறாக அவைத்தலைவர் இருக்கிறார். இதனால் ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவருடைய நடவடிக்கை இந்தியாவின் கண்ணியத்தை காயப்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் நாங்கள் இந்த கட்டாய நடவடிக்கையை எடுத்துள்ளோம். நாங்கள் ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்துள்ளோம். இந்த முக்கியமான விசயத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன. மூன்று வருடங்களாக முக்கியமாக விசயங்கள் குறித்து பேச நேரமோ அல்லது இடமோ தரவில்லை.
நாங்கள் மாநிலங்களவை தலைவரிடம் இருந்த பாதுகாப்பை எதிர்பார்த்தோம். ஆனால், ஆளும்கட்சி எம்.பி.க்களை தொடர்ந்து பேச சைகை காட்டுகிறார். தலைவரே அரசாங்கத்தைப் பாதுகாக்கும்போது எதிர்க்கட்சிகளின் பேச்சைக் கேட்பது யார்?.
எதிர்க்கட்சி தலைவர்களை இழிவுப்படுத்த முயற்சிக்கிறார். பள்ளிக்கூடம் தலைமை ஆசிரியர் போன்று எம்.பி.க்களை ஈடுபடுத்துகிறார். அவருடைய பணி அரசு செய்தி தொடர்பாளர் போன்று உள்ளது. மாநிலங்களவையில் மிகப்பெரிய இடையூறு மாநிலங்களவை தலைவர்தான். தனிப்பட்ட குறைகள் அல்லது அரசியல் சண்டைகள் பற்றிய அறிவிப்பு அல்ல" என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.