என் மலர்
இந்தியா

காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் ஒருவர் கைது - காவல் துறை அதிரடி

- அரியானா போலீசார் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தனர்.
- மேலும் விசாரணை நடந்து வருகிறது.
காங்கிரஸ் பிரமுகர் ஹிமானி நர்வால் கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரியானா போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை ரோதக்கில் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் நர்வாலின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கொலை குறித்து விசாரிக்க அரியானா போலீசார் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தனர்.
இந்த நிலையில் நர்வால் கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "ஒருவரை நாங்கள் கைது செய்துள்ளோம். மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.
ரோதக்கில் உள்ள விஜய் நகரில் வசித்து வந்த நர்வால் அரசியலில் மிக குறுகிய காலக்கட்டத்தில் வளர்ச்சி பெற்று வந்ததை பார்த்து கட்சி தலைவர்கள் சிலர் பொறாமைப்படுவதாக நர்வாலின் தாயார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்து பேசிய நர்வாலின் தாயார் சவிதா, "கடந்த பிப்ரவரி 27-ம் தேதி நான் அவளிடம் பேசினேன். மறுநாள் ஒரு கட்சி நிகழ்ச்சியில் மும்முரமாக இருப்பேன் என்று அவள் கூறியிருந்தாள். ஆனால் அவளுடைய தொலைபேசி அணைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. என் மகளுக்கு நீதி கிடைக்காத வரை, நாங்கள் அவளை தகனம் செய்ய மாட்டோம்," என்று அவர் கூறினார்.
அரியானா காங்கிரஸ் தலைவர்கள் நர்வால் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் அர்ப்பணிப்புள்ள கட்சி பிரமுகர் என்று தெரிவித்திருந்தனர். அவர் முன்னதாக ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையிலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.