என் மலர்
இந்தியா
ரூ.210 கோடி வரி பாக்கிக்காக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம்
- வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன
- ரூ.210 கோடி வரி பாக்கிக்கு இதை செய்துள்ளதாக அஜய் குற்றம் சாட்டினார்
மக்களவையின் 543 இடங்களுக்கான தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாத இடையில் நடைபெறவுள்ளது.
தேர்தல் குறித்த அறிவிப்பை இன்னும் சில வாரங்களுக்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.
இதனால், தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உட்பட அவை இரண்டின் கூட்டணி கட்சிகள், நாடு முழுவதும், தேர்தலை எதிர்கொள்ள மும்முரமாக பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் முக்கிய தலைவரான அஜய் மக்கான் (Ajay Maken) இன்று குற்றம் சாட்டினார்.
இது குறித்து அஜய் மக்கான் தெரிவித்ததாவது:
பொது மக்களிடமிருந்து நிதி (crowdfunding) பெறுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த வங்கி கணக்குகள், காங்கிரஸ் கட்சியின் கணக்கு, இளைஞர் காங்கிரசின் கணக்கு உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன.
தேர்தல் அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ள நிலையில் இந்த முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்.
ரூ.210 கோடி வருமான வரி பாக்கிக்காக வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அஜய் தெரிவித்தார்.
2018ல் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த "தேர்தல் பத்திர திட்டம்" செல்லாது என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் பரவலாக வரவேற்றுள்ளன.
இப்பின்னணியில் தற்போது காங்கிரஸ் கட்சியின் வங்கி முடக்கம் நடைபெற்றுள்ளதாக அரசியல் விமர்சகர்களின் பார்வை உள்ளது.