என் மலர்
இந்தியா
மன்மோகன் சிங் அஸ்தி கரைப்பு நிகழ்வில் பங்கேற்காதது ஏன்?- காங்கிரஸ் விளக்கம்
- மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு தொடர்பாக பா.ஜனதா-காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு உள்ளது.
- வேதனை மற்றும் கடினமான அந்த தருணங்களில் மன்மோகன் சிங் குடும்பத்தினரின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் (வயது 92) கடந்த 26-ந்தேதி மரணமடைந்தார்.
அவரது உடல் 28-ந்தேதி டெல்லியில் யமுனை நதிக்கரையில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பின்னர் மறுநாள் அவரது அஸ்தி சேகரிக்கப்பட்டு, யமுனை நதியில் கரைக்கப்பட்டது.
அஸ்தி கரைப்பு நிகழ்வில் மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர், 3 மகள்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவரின் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சியில் அந்த கட்சியினர் பங்கேற்காதது குறித்து பா.ஜனதா கடுமையாக விமர்சித்து உள்ளது. மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு தொடர்பாக பா.ஜனதா-காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து மன்மோகன் சிங் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு மரியாதை அளிப்பதற்காகவே, அஸ்தி கரைப்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை என காங்கிரஸ் விளக்கம் அளித்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருடன் பேசியபோது, அவரது இறுதிச்சடங்கின்போது குடும்பத்தின் தனியுரிமை மீறப்பட்டு உள்ளதும், அவரது உறவினர்கள் சிதைக்கு அருகே செல்ல முடியாததும் மனக்குறையாக இருந்தது தெரியவந்தது.
எனவே அவரது அஸ்தி சேகரிப்பு மற்றும் கரைப்பின்போது அவர்களது தனியுரிமை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அந்த நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. வேதனை மற்றும் கடினமான அந்த தருணங்களில் மன்மோகன் சிங் குடும்பத்தினரின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.