என் மலர்
இந்தியா

ஊழல்வாதிகள் கொலையாளிகளை விட பெரிய சமூக அச்சுறுத்தல்கள் - உச்சநீதிமன்றம் வேதனை

- ஊழல் குறித்து கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
- முன்ஜாமீன் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
அரசு துறைகள் மற்றும் அரசியல் கட்சிகளில் உயர் மட்டங்களில் உள்ள ஊழல்வாதிகள், கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளிகளை விட சமூகத்திற்கு மிப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பொது வாழ்வில் ஊழல் குறித்து கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
"வளரும் நாட்டில் ஒரு சமூகம் கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளிகள் முதல் சட்டம்ஒழுங்கு வரையிலான அச்சுறுத்தலை விட பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என்றால், அது அரசாங்கத்தின் உயர் மட்டங்களிலும் அரசியல் கட்சிகளிலும் உள்ள ஊழல்வாதிகளிடம் இருந்து தான் வருகிறது," என்று நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
கிராம பஞ்சாயத்துகள் மேற்கொள்ளும் வளர்ச்சி பணிகளை தணிக்கை செய்ய லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பஞ்சாப் அரசின் தணிக்கை ஆய்வாளர் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இத்தகைய காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மேலும் கூறும் போது, "நமது சமூகத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திய ஒரே ஒரு காரணியைக் குறிப்பிடச் சொன்னால், அது மறுக்க முடியாத ஊழல். ஊழலின் அளவு குறித்து மக்கள் மத்தியில் இருந்த கருத்துக்களில் ஒரு பகுதியே உண்மையாக இருந்தாலும், உயர் பதவியில் உள்ளவர்கள் தண்டனையின்றி செய்யும் பரவலான ஊழல்தான் இந்த நாட்டில் பொருளாதார அதிருப்திக்கு வழிவகுத்தது என்ற பார்வை உண்மையிலிருந்து தொலைவில் இருக்காது," என்று தெரிவித்தது.