என் மலர்
இந்தியா
திருமண நாளை கொண்டாடிவிட்டு கணவன்-மனைவி தற்கொலை: உருக்கமான தகவல்கள்
- மறுநாள் அதிகாலை வேளையில் ஒரு வீடியோ பதிவை உறவினர்களுக்கு அனுப்பினர்.
- எங்களை ஒரே சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யுங்கள் என்று உருக்கமாக கூறி இருந்தனர்.
நாக்பூர்:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மார்ட்டின் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெரில் என்ற டோனி ஆஸ்கார்(வயது56). இவரது மனைவி அன்னி(45). ஜெரில் பிரபல ஓட்டல்களில் சமையல்காரராக வேலை செய்தவர். கொரோனாவுக்கு பிறகு வேலைக்கு செல்லவில்லை.
இந்த தம்பதிக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. ஆனாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் பாசத்துடன் வாழ்ந்து வந்தனர்.
சம்பவத்தன்று இரவு தங்களது 26-வது திருமண நாளை வெகுவிமரிசையாக கொண்டாடினர். உறவினர்கள், நண்பர்களை அழைத்து விருந்து வைத்தனர். மறுநாள் அதிகாலை வேளையில் ஒரு வீடியோ பதிவை உறவினர்களுக்கு அனுப்பினர். அதில் "நாங்கள் இந்த உலகத்தை விட்டு செல்கிறோம்" என்று கூறியிருந்தனர்.
இதைப்பார்த்த உறவுக்கார பெண் ஒருவர் பதறினார். அவர் உடனே மற்ற உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் ஜெரில் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது படுக்கையில் மணக்கோலத்தில் அன்னி பேச்சுமூச்சு இன்றி கிடந்தார். சமையல் அறையில் ஜெரில் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
முதலில் அன்னி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை தூக்கு கயிற்றில் இருந்து இறக்கிய ஜெரில், தனது மனைவியின் உடலுக்கு திருமணத்தின்போது எடுத்த சேலையை அணிவித்து, பூ, பொட்டு வைத்து மணக்கோலத்தில் அலங்கரித்துள்ளார். பின்னர் ஜெரில் தானும் திருமணத்தின் போது எடுத்த ஆடையை அணிந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
அவர்கள் உறவினர்களுக்கு அனுப்பிய வீடியோவில் உருக்கமாக பேசி இருந்தது தெரியவந்தது. அதில், "எங்களது சாவுக்கு நாங்களே காரணம். சொத்துகளை உறவினர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்களை ஒரே சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யுங்கள்" என்று உருக்கமாக கூறி இருந்தனர்.
திருமண நாளை வெகுவிமரிசையாக கொண்டாடிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இந்த தம்பதி ஏற்கனவே திட்டமிட்டு, இந்த விபரீத செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கணவன்-மனைவி இருவரும் உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்ததும், குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்ததும் தெரியவந்தது. இதுவே அவர்களின் இந்த விபரீத முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த துயரம் குறித்து உறவினர்கள் கூறுகையில், "திருமண நாளை தம்பதியர் கொண்டாடியபோது அவர்கள் அனைவருடன் சகஜமாக பேசினர். நண்பர்கள் விளையாட்டு காட்டியபோது சிரித்து மகிழ்ந்தனர். ஆனால் அடுத்தநாள் அவர்களை பிணமாக பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அனைவருக்கும் பிரியாவிடை கொடுக்கத்தான் திருமண நாளை கொண்டாடி இருப்பதாக கருதுகிறோம்" என்றனர்.
திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடிவிட்டு துயர முடிவை தேடிக்கொண்ட தம்பதியரால் அந்தப்பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது.