search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரசில் ஆழமான விரிசல்.. வேறு ஆப்ஷன் பற்றி பேசிய சசி தரூர் - விரும்பி அழைத்த சி.பி.எம்!
    X

    காங்கிரசில் ஆழமான விரிசல்.. 'வேறு ஆப்ஷன்' பற்றி பேசிய சசி தரூர் - விரும்பி அழைத்த சி.பி.எம்!

    • "அறியாமை பேரின்பமாக இருக்கும் இடத்தில், புத்திசாலித்தனமாக இருப்பது முட்டாள்தனம்"
    • தரூர் அரசியல் அனாதையாக விடப்பட மாட்டார் என்று தெரிவித்துள்ளது.

    கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் திருவனந்தபுரம் தொகுதி எம்.பியுமான சசி தரூர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு குறித்து சசி தரூர் பாராட்டி பேசினார். கேரளாவில் ஆளும் இடது முன்னணி ( எல்.டி.எப் ) அரசின் கொள்கைகளையும் சசி தரூர் பாராட்டி பேசினார். இது காங்கிரஸ் தலைவர்களிடையே முணுமுணுப்பை ஏற்படுத்தியது.

    கேரள மாநில காங்கிரஸ் சரியான தலைமை இன்றி தவிப்பதாகவும் அவர் கூறியது உள்ளூர் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கிடையே கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சசி தரூர் சந்தித்து பேசினார்.

    அரை மணி நேர சந்திப்பில் ராகுலிடம் தான் சில முக்கிய பிரச்சனைகளை எடுத்துக்கூறியதாக சசி தரூர் தெரிவித்தார். மேலும் அன்றைய தினம் செய்தியாளர்களிடம் உட்கட்சி பிரச்சனை பற்றி பேச மறுத்துவிட்டார். ''இன்று முக்கிய கிரிக்கெட் மேட்ச். எல்லோரும் சென்று பாருங்கள்'' என்று மட்டும் கூறிவிட்டு நழுவினார்.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் நேர்காணலில் பங்கேற்ற சசி தரூர், நான் எப்போதும் அணுகக்கூடியவனாகவே இருக்கிறேன். கட்சிக்காக பணியாற்றத் தயாராக இருக்கிறேன். ஆனால், அவர்களுக்கு விருப்பமில்லை என்றால், எனக்கு வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றன.

    கட்சி மாறுவது குறித்த வதந்திகள் உண்மை இல்லை. என்னை ஒரு அரசியல்வாதியாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை. புதிய வாக்காளர்களை ஈர்க்க காங்கிரஸ் தனது தளத்தை கேரளாவில் விரிவுபடுத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

    கேரளாவில் தேர்தலுக்கு ஒரு ஆண்டு மட்டுமே உள்ளது. அதற்குள் காங்கிரஸ் தனது ஆதரவு மட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் கேரளாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே சசி தரூரை வரவேற்கத் தயாராக இருப்பதாகக் கேரள மாநில சிபிஎம் கட்சி தெரிவித்துள்ளது. சசி தரூர் அரசியல் அனாதையாக விடப்பட மாட்டார் என்றும் தாங்கள் அவரை வரவேற்போம் என்றும் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். சசி தரூருக்காக கட்சி எப்போதும் ஒரு கதவைத் திறந்து வைக்கும் என்று சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் கூறினார்.

    சமீபத்தில் சசி தரூரின் எக்ஸ் பதிவு ஒன்றும் வைரலானது. 18 ஆம் நூற்றாண்டின் ஆங்கிலக் கவிஞர் தாமஸ் கிரே எழுதிய ஒரு கவிதையிலிருந்து சில வரிகளை சசி தரூர் பகிர்ந்தார். "அறியாமை பேரின்பமாக இருக்கும் இடத்தில், புத்திசாலித்தனமாக இருப்பது முட்டாள்தனம்" என்று அந்த கவிதை கூறுகிறது. சசி தரூரும் அதையே மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது.

    Next Story
    ×