என் மலர்
இந்தியா
நடனம் ஆடிக்கொண்டிருந்த தலைமைக் காவலர் திடீரென சரிந்து மரணம்
- நடனம் அல்லது நிகழ்ச்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.
- சகோதரரியின் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்தார்.
டெல்லியில் பிரியாவிடை விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த இளம் போலீஸ் அதிகாரி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரியும் ரவிக்குமார், நேற்று முன்தினம் நடைபெற்ற சக ஊழியரின் பிரியாவிடை விருந்தில் கலந்து கொண்டு மகிழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து ரவிக்குமார் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ரவிக்குமாரின் இறுதித் தருணங்கள் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவரும் மற்றொரு நபரும் பாடல் ஒன்றுக்கு காலை அசைத்தபடி நடனம் ஆடுகின்றனர். சிறிது நேரம் கழித்து, ரவி சிரித்துக்கொண்டே ஒதுங்குவதைக் காணமுடிகிறது. இதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
உயிரிழந்த ரவிக்குமாருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் 2010-ம் ஆண்டு முதல் டெல்லி போலீஸ் படையில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். 45 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு ஆஞ்சியோகிராபி செய்யப்பட்டது.
நடனம் அல்லது நிகழ்ச்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் தனது சகோதரரியின் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்தார்.
இந்தூரில் நடந்த ஒரு யோகா நிகழ்வில் தேசபக்தி பாடலில் உற்சாகமான நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருந்த போது, இந்தியக்கொடியைப் பிடித்தபடி ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபரில், கடந்த 24 மணி நேரத்தில் குஜராத் முழுவதும் கர்பா நிகழ்வுகளில் குறைந்தது 10 மாரடைப்பு இறப்புகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் இளையவர் 17 வயது மட்டுமே.