search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி தேர்தல் எக்ஸ்குளூசிவ்: பாஜக அமைத்த பட்ஜெட் வியூகம்.. கெஜ்ரிவாலுக்கு லாக் - என்ன நடக்கிறது?
    X

    டெல்லி தேர்தல் எக்ஸ்குளூசிவ்: பாஜக அமைத்த 'பட்ஜெட் வியூகம்..' கெஜ்ரிவாலுக்கு லாக் - என்ன நடக்கிறது?

    • ஆளும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.
    • டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சம் வரை அதிகரிப்பது உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். இந்த பட்ஜெட் குறித்து டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நாட்டின் கருவூலத்தின் பெரும் பகுதி, ஒரு சில பணக்காரர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கே செலவிடப்படுகிறது. இனிமேல் எந்த கோடீஸ்வரரின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படாது என்று இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டும் என்று நான் கோரியிருந்தேன்.

    இதிலிருந்து சேமிக்கப்பட்ட பணத்தில் நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டுக் கடன்கள் மற்றும் வாகனக் கடன்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி விகிதங்களை பாதியாகக் குறைக்க வேண்டும் என்று கூறியிருந்த எதுவும் செய்யப்படாததற்கு வருந்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. மத்திய பட்ஜெட்டில் தேர்தலை சந்திக்க உள்ள பீகாருக்கும் டெல்லிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். தவிர, ஏராளமான ராணுவ முகாம்களின் அதிகாரிகளும் டெல்லியின் வாக்காளர்களாக உள்ளனர். டெல்லியில் மொத்த வாக்காளர்களில் 45 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர்.

    இந்த நடுத்தர வர்க்க வாக்காளர்கள்தான் டெல்லி வாக்குகளில் தீர்மானிக்கும் சக்தி. அரவிந்த் கெஜ்ரிவாலின் 'ஊழல்க்கு எதிரான வெளிப்படையான மனிதன்' மற்றும் 'சாமானியர்களின் பிரதிநிதி' என்ற பிம்பம் டெல்லி நடுத்தர வர்க்கத்தினரிடம் மிகவும் பிரசித்தம்.

    ஆனால் மதுபான ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கெஜ்ரிவால் கைதான பிறகு இந்த இரண்டு பிம்பங்களும் சற்றே சிதைந்துள்ளது. மேலும் விலையுயர்ந்த கார்கள் மற்றும் சொகுசுமாளிகை வாசம் என கெஜ்ரிவால் மீது பாஜக மேற்கொண்ட பிரசாரத்தால் ஆம் ஆத்மி இமேஜை கேள்விக்குறியாகியுள்ளது.

    இந்நிலையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கான வரிச்சலுகை டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×