என் மலர்
இந்தியா
மக்களவையில் நடந்தது என்ன?: தி.மு.க. எம்.பி. கனிமொழி விளக்கம்
- மக்களவையின் உள்ளே மற்றும் வெளியே கண்ணீர் புகை குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கலர் புகை குண்டு வீசிய போது நான் மக்களவைக்குள் இருந்தேன். திடீரென சத்தம் கேட்டபோது ஒருவர் மேஜைகள் மீது ஏறி ஓடினார்.
முதலில் குதித்தவர் கையில் காலணி இருந்தது. பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்தவர்களை எம்.பி.க்கள் தடுத்தனர்.
இருவரும் தங்கள் காலுக்கு கீழ் இருந்த சிலிண்டர் போன்ற கருவியில் இருந்து புகையைப் பரப்பினர். புகையில் அவையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அவை மீண்டும் கூடியபோதும் புகையால் அங்கு மூச்சுத்திணறல் இருந்தது. பார்வையாளர் மாடத்தில் இருந்து எளிதாக எம்பிக்கள் இருக்கும் இடத்தை அடையும் வகையில் கட்டட அமைப்பு உள்ளது.
எம்.பி.க்கள் வருவதற்கு கட்டுப்பாடுகள் இருக்கும்போது இவர்கள் எப்படி வந்தார்கள்? உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்படும் பிரதமரே இங்கு வரும்போது இந்த தாக்குதலானது அச்சத்தை ஏற்படுத்துகிறது. பாராளுமன்ற கட்டடத்தில் பாதுகாப்பு இல்லாத உணர்வு ஏற்படுகிறது.
கலர் புகைக்கு பதில் ஏதேனும் வைத்து தாக்குதல் நடத்தியிருந்தால் உயிரிழப்புகள் நடந்திருக்கும். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் தான் என தெரிவித்துள்ளார்.