என் மலர்
இந்தியா
போதைப்பொருள் வியாபாரி விஷால் மேஷ்ராம் கைதுக்கு உதவிய 'புஷ்பா 2'
- விஷால் மேஷ்ரம் மீது 2 கொலை உட்பட 27 வழக்குகள் உள்ளது.
- திரையரங்கிற்கு வந்த போலீசார் முதலில் விஷால் மேஷ்ரமின் காரை பஞ்சராக்கிவிட்டு திரையரங்கிற்குள் நுழைந்தனர்.
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 5-ந்தேதி 'புஷ்பா 2' திரையரங்குகளில் வெளியானது. ஆனால் அதற்கு முன் வெளியான சிறப்பு காட்சியில் இருந்து சர்ச்சைக்குள்ளானது 'புஷ்பா 2'. கடந்த 4-ந்தேதி வெளியான சிறப்பு காட்சியை காண அல்லு அர்ஜூன் வந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் கூட்டநெரிசலில் மயக்கமடைந்த அப்பெண்ணின் மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே, மும்பை பாந்த்ராவில் உள்ள திரையிரங்கில் 'புஷ்பா 2' படம் ஓடிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென ஸ்பிரே ஒன்றை அடித்தார். இதனால் படத்தை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக படம் பாதிலேயே நிறுத்தப்பட்டது.
இதனிடையே பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜூன் கைதாகி பின்னர் ஜாமினில் விடுதலையானார். தெலுங்கு சட்டசபையில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பேசிய முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டைகளை முன் வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய அல்லு அர்ஜூன், தான் சட்டத்தை மதிப்பதாகவும், தனது பெயரை கெடுக்க சதி நடப்பதாகவும் கூறினார். இதற்கிடையே ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜூன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இப்படி சர்ச்சை சம்பவங்கள் 'புஷ்பா-2' வெளியானது முதல் நடைபெற்று வரும் நிலையில், படத்தை பார்க்க வந்த போதைப்பொருள் குற்றவாளியை போலீசார் க்ளைமாக்ஸ் காட்சியில் கைது செய்துள்ள சம்பவம் நாக்பூரில் நடைபெற்றுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியான விஷால் மேஷ்ரம் மீது 2 கொலை உட்பட 27 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்துள்ளார். இவர் தற்போது 'புஷ்பா-2' படத்தை பார்க்க திரையரங்கிற்கு வந்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திரையரங்கிற்கு வந்த போலீசார் முதலில் விஷால் மேஷ்ரமின் காரை பஞ்சராக்கிவிட்டு திரையரங்கிற்குள் நுழைந்தனர். அப்போது படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ஓடிக்கொண்டிருக்கும் போது விஷால் மேஷ்ரமை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.