என் மலர்
இந்தியா

கட்டாய மதமாற்றம் செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும் - மத்தியப் பிரதேச முதல்வர் அறிவிப்பு

- மத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிக அபராதம் உள்ளது.
- பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க இதே போன்ற சட்டங்கள் உள்ளன.
கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை தனது அரசு கொண்டுவரும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எங்கள் அப்பாவி மகள்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்பவர்களுக்கு எதிராக எங்கள் அரசாங்கம் மிகவும் கண்டிப்புடன் இருக்கும்.
அவர்களை கட்டாயப்படுத்துபவர்களை நாங்கள் விடமாட்டோம். அத்தகையவர்களை வாழ அனுமதிக்கக்கூடாது. மத சுதந்திரச் சட்டத்தின் மூலம், கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் விதியை விரிவுபடுத்த நாங்கள் பாடுபடுகிறோம் என்று தெரிவித்தார்.
இந்துப் பெண்களை திருமணம் செய்து கொண்டு , இஸ்லாத்திற்கு அவர்களை மாற்றி முஸ்லிம் ஆண்கள் "லவ் ஜிஹாத்" செய்கின்றனர் என பாஜக கூறி வருகிறது. எனவே இதுபோன்ற கட்டாய மதமாற்றங்களுக்கு எதிரான கடந்த 2021 மார்ச்சில் அன்று மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் மத சுதந்திரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி மத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிக அபராதம் விதிக்கப்படும்.
திருமண மூலம் மதமாற்றம் செய்தல், அச்சுறுத்தல், செல்வாக்கு மற்றும் வற்புறுத்தல் ஆகியவை மூலம் மதமாற்றம் செய்தல் ஆகியவை இந்த சட்டத்தின்கீழ் அடங்கும்.
மதத்தை மறைத்து திருமணம் செய்தால், மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படலாம். இந்நிலையில் இந்த சட்டத்தின்கீழ் கட்டாய மதமாற்றம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்படும் என மோகன் யாதவ் தற்போது கூறியுள்ளார்.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க இதே போன்ற சட்டங்கள் உள்ளன. ஆனால் இந்த சட்டங்கள் மூலம் விரும்பி வேற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்பவர்கள், மதம் மாறுபவர்கள் குறிவைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.