search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண் டாக்டர் கொலை விவகாரம்: பேரணி நடத்திய மாணவர்கள்மீது தடியடி நடத்திய போலீசார்
    X

    பெண் டாக்டர் கொலை விவகாரம்: பேரணி நடத்திய மாணவர்கள்மீது தடியடி நடத்திய போலீசார்

    • பெண் டாக்டர் கொலை விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.
    • இன்று பேரணி நடத்திய மாணவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தினர்.

    கொல்கத்தா:

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் கடந்த 9-ம் தேதி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைதுசெய்தனர். இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இச்சம்பவத்தால் நாடுமுழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், சுப்ரீம் கோர்ட்டின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர்.

    இதற்கிடையே, பெண் டாக்டர் கொலைக்கு நீதி வேண்டியும், உண்மையான குற்றவாளிகளை கைதுசெய்யக் கோரியும், முதல் மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலக கோரியும் இன்று அம்மாநில தலைமைச் செயலகத்துக்கு பேரணியாகச் சென்று முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக மாணவர் அமைப்பான பாஸ்கிம் பங்கா சத்ர சமாஜ் (மேற்குவங்க மாணவர் சமூகம்) அறிவித்தது. இது பதிவு செய்யப்படாத அமைப்பு ஆகும். அதேபோல், மாநில அரசு ஊழியர்களின் அமைப்பான சங்க்ராமி ஜெவுதா மஞ்சாவும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

    இந்நிலையில், தலைநகர் கொல்கத்தாவில் இரு பகுதிகளில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு பேரணியாகப் புறப்பட்டு தலைமைச் செயலகத்தை மாணவர்கள் முற்றுகையிட திட்டமிட்டனர். இந்தப் போராட்டத்துக்கு போலீசார் அனுமதிக்கவில்லை. ஆனாலும் இன்று காலை மாணவர்கள் அதிகளவில் திரண்டனர். நேரம் செல்ல செல்ல மாணவர்களின் கூட்டம் அதிகரித்தது. அவர்கள் தங்களது கைகளில் பதாகைளை வைத்திருந்தனர்.

    'பெண் டாக்டர்கள் கொலைக்கு நீதி வேண்டும். முதல்வர் மம்தா பானர்ஜி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பேரணியாக செல்ல மாணவர்கள் குவிந்ததால் கொல்கத்தாவில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மாணவர்கள் போராட்டம் காரணமாக கொல்கத்தாவில் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் பகுதியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சுமார் 6,000 போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தலைமைச் செயலகத்தை சுற்றி உள்ள சாலைகளில் மட்டும் 2,100 போலீசார் குவிக்கப்பட்டனர்.

    சில சாலைகள் மூடப்பட்டன. ஹவுரா மேம்பாலமும் மூடப்பட்டது. அங்கும் போலீசார் குவிக்கப்பட்டனர். மேம்பாலத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்க அங்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு அவை ஒன்றுடன் ஒன்று இணைத்து வெல்டிங் செய்யப்பட்டுள்ளது.

    சாலைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஓட்டல்களில் தங்கி உள்ளவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.

    பேரணியை டிரோன்கள் மூலம் கண்காணித்து வருகிறார்கள். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது. தலைமைச் செயலகத்துக்கு செல்லும் பாதைகளில் 19 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் எண்ணையை போலீசார் தடவி உள்ளனர்.

    நிலைமையைக் கண்காணிக்க 26 கலெக்டர்களை அரசு நியமித்துள்ளது. மேலும், கொலை சம்பவம் நடந்த ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முதல் மந்திரி மம்தா பானர்ஜி வீட்டுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கொல்கத்தாவில் இன்று காலை முதலே பதற்றம் நிலவி வருகிறது. போராட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட வாய்ப்பு உள்ளதால், பல கல்வி நிறுவனங்கள் இன்று விடுமுறை அறிவித்தன. சில நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

    மதியம் சுமார் 12.30 மணியளவில் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி தொடங்கியது. அப்போது சிலர் தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரின்மீது கற்கள் வீசப்பட்டன.

    ஹவுரா மேம்பாலத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயற்சித்தனர். அங்கிருந்த தடுப்புகளை உடைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. தடுப்புகள்மீது ஏறி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தடியடி நடத்தினர். கலைந்து செல்லாததால் போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர், கண்ணீர் புகைகுண்டுகளும் வீசப்பட்டன. இதனால் போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் வன்முறை வெடித்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×