என் மலர்
இந்தியா

ராமர் கோவில் முதல் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வரை.. யார் இந்த புதிய தலைமை தேர்தல் ஆணையர்?

- குழந்தை வடிவில் உள்ள ராமரின் சிலையைத் தேர்ந்தெடுப்பதற்கான நடுவர் குழுவில் ஞானேஷ் குமார் உறுப்பினராக இருந்தார்.
- அமித் ஷாவின் கீழ் இயங்கும் உள்துறை அமைச்சம், கூட்டுறவு அமைச்சகம் ஆகிய இரண்டிலும் ஞானேஷ் குமார் பணியாற்றினார்.
கடந்த திங்கள்கிழமை இரவோடு இரவாக அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் ஞானேஷ் குமார். எதிர்க்கட்சி விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று(பிப்ரவரி 19) காலை 26 ஆவது தலைமை தேர்தல் ஆணையராக அவர் பதவியேற்றுள்ளார்.
யார் இந்த ஞானேஷ் குமார்:
ஜனவரி 27, 1964 அன்று உத்தரப் பிரதேசம் ஆக்ராவில் பிறந்த ஞானேஷ் குமார் மிகவும் படித்த வசதியான குடும்ப பின்னணியைக் கொண்டவர். அவரது தந்தை டாக்டர் சுபோத் குப்தா மாவட்ட சுகாதர அதிகாரி CMO பதவி வகித்தவர்.
ஞானேஷ் குமார் கான்பூரில் உள்ள ஐஐடியில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக். பட்டம் பெற்றார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
1988 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று கேரளப் கேட்ரே ஐஏஎஸ் அதிகாரியானார். திருவனந்தபுரத்தில் மாவட்ட நிர்வாக அதிகாரியாக முதல் பணி நியமனம் கிடைத்தது. UPA அரசின்போது 2007 முதல் 2012 வரை பாதுகாப்பு அமைச்சகத்தில் இணைச் செயலாளராக இருந்தார்.
2014 ஆம் ஆண்டு,டெல்லியில் கேரள அரசின் குடியுரிமை(citizenship)ஆணையராகப் பணியாற்றினார். 2024 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு மார்ச் 15 ஆம் தேதி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். முன்னதாக அமித் ஷாவின் கீழ் இயங்கும் உள்துறை அமைச்சம், கூட்டுறவு அமைச்சகம் ஆகிய இரண்டிலும் பணியாற்றிய ஞானேஷ் குமார் அவருக்கு நெருக்கமானவராக இருந்தார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்:
2019 இல் ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் பிரிவு 370 மற்றும் பிரிவு 35A இன் விதிகள் ரத்து செய்யப்பட்டன. இதன் மூலம், ஜம்மு-காஷ்மீர் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீருடன் சேர்ந்து, லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.
அப்போது ஞானேஷ் குமார் உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக இருந்தார். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் -2019 ஐ உருவாக்குவதிலும் அதை செயல்படுத்துவதிலும் ஞானேஷ் குமார் முக்கிய பங்கு வகித்தார்.
அயோத்தி ராமர் கோவில்:
2019 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அயோத்தி வழக்கு தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் ஞானேஷ் குமாருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்பின் ராமர் கோவில் உருவாக்கத்தில் ஞானேஷ் குமாருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.
ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதன் பிரதிநிதியாக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டார். குழந்தை வடிவில் உள்ள ஸ்ரீ ராமரின் சிலையைத் தேர்ந்தெடுப்பதற்கான நடுவர் குழுவில் ஞானேஷ் குமார் உறுப்பினராக இருந்தார்.
இந்நிலையில் தற்போது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ் குமாரின் பதவிக்காலம் ஜனவரி 26, 2029 வரை நீடிக்கும். அவரது தலைமையில் எதிர்வரும் பீகார், அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.