என் மலர்
இந்தியா
உபேர், ஓலா நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளித்த மத்திய அரசு: காரணம் இதுதான்
- உபேர், ஓலா நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கி வருகிறது.
- ஐபோன், ஆண்ட்ராய்டில் பதிவுசெய்வதில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
புதுடெல்லி:
டாக்சி ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் உபேர் மற்றும் ஓலா நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கி வருகிறது.
இந்தச் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கு வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வெளியாகின.
இந்தப் புகார்கள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வாடிக்கையாளர்களின் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் பதிவுசெய்வதில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அந்த நிறுவனங்களின் கட்டண அறிக்கைகள் தொடர்பாக உபேர், ஓலா நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.